Tuesday, 6 January 2015




திறமை இல்லாப் பட்டதாரிகள்
சிவக்குமார் பழனியப்பன்
மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில் வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள், உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8% முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.
காத்திருக்க முடியுமா?
அப்படியென்றால், மொத்தம் 85 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலை இல்லாமல்தானே கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள்? (இதில் 100% வேலைவாய்ப்பு என்று விளம்பரங்கள் வேறு). ஏதோ கண்துடைப்பு வேலையாக ஊர், பேர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களிலெல்லாம் வேலைக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டு, பின்னர் ‘எங்களுக்கு ஒன்றுமே தெரியாது’ என்று கைவிரிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது.
சரி, கல்லூரிகளையும் பாடத்திட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய ‘அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம்’ என்ன சொல்கிறது? “கவலைப் படாதீர்கள், தரமற்ற கல்லூரிகளையெல்லாம் காலப் போக்கில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் அவர்களே மூடிவிடுவார்கள். தரமான கல்வியைக் கொடுக்கும் நல்ல கல்லூரிகள் மட்டுமே நிலைக்கும். அதுவரைக்கும் சற்றுப் பொறுமையாகக் காத்திருங்கள்” என்கிறது.
இளைஞர்களின் கதி என்ன?
ஏதோ நினைத்த மாத்திரத்தில் திறந்து மூடும் சாலையோர உணவகங்கள்போல, அவர்களே மூடிவிடு வார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். வியர்வை சிந்தி, உயிரைக் கொடுத்து உழைத்த பெற்றோரின் உழைப்பினால் வந்த காசைக் கொடுத்து, தங்கள் இளம் பருவத்தைத் தொலைத்து, எந்தத் திறமையும் அறிவும் இல்லாமல் பட்டம் பெற்று வெளியில் வந்து வேலை கிடைக்காமல் தெருவில் நிற்கும் இளைஞர்களின் கதி என்ன? வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளைஞர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்?
2013-ல் தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களில் பலர் முதல் செமஸ்டர் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சித் தகவல். 12-ம் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் 200/200 மதிப்பெண் பெற்றவர்கள், கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது பேரதிர்ச்சி.
பள்ளிகளை விட்டுக் கல்லூரிக்கு வந்தால் அங்கும் அதே கதைதான். பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்களைவிட மாணவர்களை மிகவும் கடுமையாக நடத்துகின்றன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பல்கலைக்கழக ரேங்க். எப்படியாவது செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் முதல் ரேங்க் பெற்றுவிட வேண்டும், கல்லூரி வாசலில் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும். இதுதான் பிரதானக் குறிக்கோள்.
ஷேக்ஸ்பியர், எலியட் தெரியவில்லை
தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் பயிலும், பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ-மாணவியரிடம் அவர்கள் துறை சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட தெளிவான பதில் இல்லை. சமீபத்தில் மின்னணு உதிரிப் பாகம் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் சொன்னது, “நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் துறை சார்ந்த தெளிவும், அடிப்படை மின்னணுபற்றிய அறிவும்தான். நான்கு ஆண்டுகள் மின்னியல் பயின்ற பல பட்டதாரிகளுக்கு மின்னோட்டம்குறித்த அடிப்படை விதியான ‘ஓம்ஸ்’ விதி தெரியவில்லை. இவர்களை எந்த அடிப்படையில் வேலைக்கு எடுப்பது?”
ஆங்கில ஆசிரியர் பணிக்கு தேர்வு நடத்தி, ஒருவரைக்கூட வேலைக்கு எடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு பள்ளி முதல்வர் இப்படிச் சொல்கிறார்: “பொறியியல் மட்டுமல்ல, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இலக்கணப் பிழை இல்லாமல் எழுத, பேசத் தெரியவில்லை. ஷேக்ஸ்பியர் தெரியவில்லை, எலியட் தெரியவில்லை, ஆங்கில இலக்கியம் சார்ந்த எதுவும் தெரியவில்லை.” ஆங்கிலோ-இந்திய ஆசிரியர்கள் கிடைப்பார்களா என்று இப்போது தேடிவருகிறார்.
நமது அடிப்படைக் கல்வி முறையில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால், உலகெங்கும் நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் மக்கள்தொகை லாபம், வெறும் மக்கள்தொகை சாபமாக மாறக்கூடிய காலம் வெகு விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.
வெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான நமது கல்வி முறை மாற வேண்டும். மதிப்பெண்களோடு, மாணவர்களின் தனித் திறமைகளையும் கண்டெடுத்து வளர்க்கும், திறன் சார்ந்த கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வேகமாக மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப நமது கல்வி முறையிலும் தாமதம் இல்லாத, துரிதமான மாற்றங்களைக் கொண்டுவரும் வழிவகைகள் செய்ய வேண்டும்.
ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசாங்கம் அனைவருக்கும் மதிப்பெண்களைத் தாண்டிய சிந்தனை வர வேண்டும். நமது கல்வி முறையில் தக்க மாற்றங்கள் செய்து, சிறந்த திறன் மிகுந்த பட்டதாரிகளை உருவாக்கத் தவறினால், இந்த தேசம் ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ நிறைந்த, திண்டாடும் தேசமாகத்தான் திகழும் என்பது நிச்சயம்.
2015-ன் சவால்கள்
இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களும் நிறைய.
மாற்றமும் வளர்ச்சியும் வேண்டும் என்று 10
ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைத்
தூக்கியெறிந்துவிட்டு, மோடி தலைமையிலான பாஜகவைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் மக்கள். ஆனால், மக்களின்
எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் திசையை நோக்கிக் கடந்த ஆறு
மாதங்களில் எதிர்பார்த்த வேகத்தில் மோடி அரசு
செயல்படவில்லை என்பதுதான் உண்மை. பிரிவினைவாத
அரசியலைத் தவிர்த்துவிட்டு, மக்களுக்கான உண்மையான
வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியதே மோடி அரசுக்கு உள்ள
சவால்.
தலையங்கம்
Published: the tamil hindu January 1, 2015 09:50 IST Updated: January 1, 2015 09:50 IST

பார்லே ஜி பிஸ்கெட்


பார்லே ஜி பிஸ்கெட் ஐந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி, உலக பிஸ்கெட்களில் முதல் இடம் பிடிக்கும் பிராண்ட் எது?
இந்தியாவில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான கடைகளில் கிடைக்கும் பிஸ்கெட் எது?
மக்களின் ருசியும், ரசனையும் நாளுக்கு நாள் மாறும் நிலையில், 76 ஆண்டுகளாக மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும் பிஸ்கெட் எது?
மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் பார்லே ஜி பிஸ்கெட்!
இந்தியாவில், பிஸ்கெட்களை இரண்டு வகையாகச் சாப்பிடுகிறோம். காபி, டீயோடு சாப்பிடும் சிற்றுண்டியாக: குழந்தைகளின் தின்பண்டமாக.
1930 கால கட்டம். இந்தியாவில் கிடைத்த பிஸ்கெட்கள் இரண்டு வகை. முதல் வகை, ஒவ்வொரு ஊரிலும் இருந்த சிறிய பேக்கரிகள் தயாரித்தவை. இவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா என்பது பற்றி மக்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்தன. இரண்டாம் வகை பிஸ்கெட்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதியாயின. இவை தரமும் சுவையும் கொண்டவை. ஆனால், இவற்றின் விலை நடுத்தர, அடிமட்ட மக்களுக்குக் கட்டுப்படியாகாத அதிக விலை. ஆகவே, இவர்களில் பெரும்பாலானோர், டீயோடு ரஸ்க், பன், பொறை, லோக்கல் பிஸ்கெட் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிட்டார்கள்.
பெற்றோர்களின் ஏக்கம்
குழந்தைகளின் உணவுகளை வாங்கும்போது, நாம் அதிக எச்சரிக்கையாக இருப்போம். ஆகவே, பணக்காரர்கள் அல்லாதோர் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறைந்த (?) பிஸ்கெட் தராமல், முறுக்கு, மிக்சர் போன்ற சிற்றுண்டிகள் தந்தார்கள். “குழந்தைகளுக்கு எண்ணெய்ப் பண்டம் கொடுக்கிறோமே, அவர்களுக்கு ஆரோக்கியமான பிஸ்கெட் தரும் வசதி நம்மிடம் இல்லையே?” என்னும் ஏக்கம் அவர்களிடம் இருந்தது.
1929 இல், மும்பையில், மோகன் லால் தயால் செளஹான் (Mohanlal Dayal Chauhan) ஆரஞ்சு மிட்டாய் போன்ற இனிப்புகள் தயாரித்துவந்தார். வில்ல பார்லே (Vile Parle) என்னும் பகுதியில் வியாபாரம் செய்ததால், தன் கம்பெனிக்குப் பார்லே புராடெக்ட்ஸ் என்று பெயர் வைத்தார். தரமான, சக்தி தரும் பிஸ்கெட்களைச் சுகாதார மான முறையில் தயாரித்துச் சகாய விலையில் தந்தால், மக்களின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யலாம், பிசினஸை வளர்க்கலாம் என்று உணர்ந்தார். உடல் சக்தி என்றால், மக்கள் நினைவுக்கு முதலில் வருவது பால். குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கும் உணவு. இதனால், ஏழை வீடுகளில்கூட, குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் வழக்கம் நாடு முழுக்க இருக்கிறது. இதேபோல், குளுக்கோஸ் சாப்பிட்டால் சோர்வு நீங்கி உடனடிப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.
பார்லே குளுக்கோ பிஸ்கெட் உருவான விதம்
பால், குளுக்கோஸ் ஆகியவற் றோடு பசி தீர்க்கும் கோதுமை மாவும் சேர்த்து மோகன்லால் பிஸ்கெட் தயாரித்தார். பார்லே குளுக்கோ (Parle Gluco) என்று பெயர் வைத்தார். கோதுமை வயிற்றுப் பசியைத் தீர்த்தது. பால் மணமும், குளுக்கோஸின் இனிப்பும் சுவை தந்தன. 100 கிராம் பிஸ்கெட் 450 கலோரி ஊட்டச் சக்தி தந்தது. நிஜமாகவே, மோகன்லாலின் தயாரிப்பு சுவையான, ஊட்டச் சத்து உணவு. 1939 ம் ஆண்டில் பார்லே குளுக்கோ அறிமுகமானது. பால், கோதுமை ஆகியவற்றின் நன்மைகளைத் தருகிற பிஸ்கெட் இது என்று முதல் பார்வையிலேயே கஸ்டமர்களுக்குத் தெரிவிக்கவேண்டுமே? பாக்கெட்டில், கோதுமை வயலில் ஒரு பெண், பசு, கன்றுக்குட்டி, பால் கறக்கும் பாத்திரம் ஆகியவற்றோடு நிற்கும் படம் இருந்தது.
விலை குறைவு
தன் பிஸ்கெட்டுக்கு, இறக்குமதி யாகும் இங்கிலாந்து பிஸ்கெட்களைவிட மட்டுமல்ல, மிக்சர், சிவ்டா போன்ற சிற்றுண்டிகளை விடவும் விலை குறைவாக மோகன்லால் வைத்தார். அன்றைய நாட்களில், விலை மலிவான தரமான ஸ்நாக் பார்லே குளுக்கோ பிஸ்கெட்தான்!
பார்லே குளுக்கோ பிறந்த வேளை ராசியான நேரம். அதே 1939 ம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது, 1945 வரை நீடித்தது. போர்முனையில் குளுக்கோஸ், அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றிலிருந்து வேதியல் முறையில் தயாரிக்கப்படும் இனிப்புப் பொருள்.
வீரர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் உணவு பிஸ்கெட். ஆகவே, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்த பிஸ்கெட் கம்பெனிகள், தங்கள் முழுத் தயாரிப் பையும் போர் முனைகளுக்கு அனுப்பினார்கள். இந்தியாவுக்கு வெளிநாட்டு பிஸ்கெட்கள் வருவது நின்றது. ஆகவே, பணக்காரர்களும் மோகன்லாலின் பிஸ்கெட் வாங்கி னார்கள். எல்லோருக்கும் பிஸ்கெட் தரமும், சுவையும் பிடித்தது. சப்ளை செய்யமுடியாத அளவுக்கு விற்பனை அதிகரித்தது.
விலை உயர்வு இல்லை
பெரும்பாலான கம்பெனிகள் இந்தத் தட்டுப்பாட்டு நேரங்களில் விலையைக் கூட்டிக் கொள்ளை லாபம் அடிப்பார்கள். ஆனால், மோகன்லால் நேர்மையாக நடந்துகொண்டார். விலையைக் கூட்டவேயில்லை. தரம், சுவை, சகாய விலை ஆகிய காரணங்களால், இந்திய பிஸ்கெட்களில் நம்பர் 1 இடத்தைப் பார்லே குளுக்கோ பிடித்தது. பார்லே குளுக்கோ சக்தி தரும், சுவை நிறைந்த சகாய விலை பிஸ்கெட் என்னும் பொசிஷனிங் மக்கள் மனங்களில் பதிந்துவிட்டது. யுத்தம் முடிந்தபின்னும் முதல் இடம் நீடித்தது.
மோகன்லால் படிக்காத மேதை. பல நவீன மார்க்கெட்டிங் யுக்திகளை உள்ளுணர்வால் அநாயசமாகக் கையாண்டார். தன் பிஸ்கெட் குறைந்த விலை என்று விளம்பரம் செய்தால், தரமும் குறைவாக இருக்கும் என்று சாதாரணமாக மக்கள் நினைப்பார்கள். ஆகவே, விளம்பரங்களில் விலையை மையப்படுத்தக்கூடாது, தரம், சுவை, சக்தி ஆகியவற்றை மட்டுமே மையப்படுத்தவேண்டும். அதே சமயம், குளுக்கோ பிஸ்கெட்டின் வெற்றிக்கு முக்கிய காரணம் குறைந்த விலை. வெற்றி தொடரவேண்டுமானால், விலையை முடிந்தவரை உயர்த்தக் கூடாது.
மோகன்லால் மறைவுக்குப் பிறகும், பார்லே புராடக்ட்ஸ் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள். 1984 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில், கோதுமை, பால், சீனி ஆகிய மூலப்பொருட்களின் விலை 150 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், இந்த 24 வருடங்களிலும், 100 கிராம் பார்லே குளுக்கோ விலை ஒரு பைசா கூட அதிகரிக்கவில்லை. 1984 முதல் 2008 வரை, அதே 4 ரூபாய்தான்!
2008 இல் பார்லேயால் விஷமாக ஏறும் விலைவாசியைச் சமாளிக்க முடியவில்லை. 100 கிராம் பாக்கெட் விலையை 4.50 ஆக்கினார்கள். 50 காசு அதிகம். ஆனால், கஸ்டமர்கள் வாங்குவதை நிறுத்தினார்கள். வேறு வழி தெரியாத நிர்வாகம் பாக்கெட் எடையை 92.5 கிராமாகக் குறைத்தார்கள். விலை அதே 4 ரூபாய்! இதேபோல், 2012- ல் எடை 88 கிராம் ஆனது. விலை என்றென்றும் மாறாத அதே நான்கு ரூபாய்! இன்றும், தரமான பிராண்டட் பிஸ்கெட்களில் மிக விலை குறைவானது பார்லே ஜி தான்.
குழந்தைகளைக் கவர…
பிசினஸ் வளர வளர, எல்லா வயதினரும் பிஸ்கெட் சாப்பிட்டாலும், குழந்தைகள்தாம் முக்கிய கஸ்டமர்கள் என்று பார்லே உணர்ந்தது. மார்க்கெட்டிங் யுக்திகளும், விளம்பரங்களும் இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன. 1960 முதல் பாக்கெட் டிசைனை மாற்றினார்கள். அதுவரை இருந்த மாடு மேய்க்கும் பெண்ணுக்குப் பதில், அழகான குழந்தை படம்!
பார்லே குளுக்கோ என்று கடைகளில் கேட்டு வாங்கக் கிராமப்புற மக்கள் சிரமப்பட்டார்கள். இதனால், 1980 இல், பிஸ்கெட் பெயரைப் பார்லே ஜி என்று சுருக்கினார்கள். ஜி என்பது குளுக்கோவின் சுருக்கம். நம் ஊரில் “ஐயா” என்பதுபோல், இந்தியில் “ஜி” என்பது மரியாதையான விளிப்பு. ஆகவே, பார்லே ஜி என்னும் புதிய சுருக் பெயர் ``நச்” என்று மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்தது.
இந்தியாவின் பிஸ்கெட் மார்க்கெட், போட்டியாளர்களின் பலங்கள், பலவீனங்கள் ஆகிய அம்சங்களை ஆழமாக அலசிய பார்லே நிர்வாகிகளுக்கு மாட்டியது ஒரு லட்டு ஐடியா. பார்லே ஜி என்றால் எனர்ஜி, எனர்ஜி என்றால் பார்லே ஜி என்று மக்களை நினைக்கவைத்துவிட்டால், யாருமே பார்லே ஜி யை அசைக்கமுடியாது.
விளம்பரங்கள்…
இப்போது கச்சேரி ஆரம்பம். 1982 இல் டி.வி. விளம்பரம் வந்தது. ஒரு தாத்தா தன் பேரனோடும், பேத்தியோடும் விளையாடும் காட்சி. அவர்கள் சேர்ந்து பார்லே ஜி சாப்பிடுவார்கள். முழுக்க முழுக்கச் சுவை, முழுக்க முழுக்க சக்தி என்னும் ஜிங்கிள் வரும். இந்த விளம்பரம் மாபெரும் வெற்றி கண்டது.
1998 இல் தொலைக்காட்சியில் சக்திமான் என்னும் தொடர் வந்துகொண் டிருந்தது. சிறுவர் சிறுமிகளுக்குப் பிடித்த ஆங்கில ஸூப்பர்மேன் தொடர்போல், இந்தியாவிலும் ஒரு ஸூப்பர் ஹீரோவை உருவாக்கும் முயற்சி. வெற்றியும் கண்டது. இந்தத் தொடரைப் பார்லே ஜி ஸ்பான்சர் செய்தார்கள். பார்லே ஜி சாப்பிட்டால் நமக்கும் சக்திமானின் பலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை சிறுவர், சிறுமியர் மனங்களில் விதைக்கப்பட்டது.

ஜி ஃபார் ஜீனியஸ்
பார்லே ஜி என்னும் பெயரில் வரும் ``ஜி” குளுக்கோ என்பதன் சுருக்கம். 2004 இல் இதிலும் மாற்றம் கொண்டுவந்தார்கள். நடிகர் அமீர்கான் ஒரு சிறுவனோடு வருவார். G = Genius என்று இருவரும் வலியுறுத்துவார்கள்.
பார்லே ஜி என்றால், உடல் வலிமையும், அறிவு பலமும் தரும் சுவை நிறைந்த சகாயவிலை பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கைத் தொடர்ந்து பார்லே கம்பெனி வலியுறுத்தி வருகிறார்கள். பிசினஸில் முதல் இடத்தைப் பிடிக்க மட்டுமல்ல, தொடர்ந்து தக்கவைத்துக்கொளவும், பொசிஷனிங்கில் தொடர்ந்து புதுமைகள் செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்பதற்குப் பார்லே ஜி நல்ல உதாரணம்.