Friday, 19 September 2014

இவன் வேற மாதிரி

எல்லாத்தையும் நம்மால நேரடியா சொல்ல முடியாது. சொல்லாத மாதிரி சொல்வோம். அது புரியாத மாதிரி புரியும். இருக்கு ஆனா இல்ல ரகம்தான். பக்கத்துல உள்ள ஆளைப் பத்தி ஏதாவது பேசுணும்னா அமெரிக்காவுல உள்ள ஆளப் பத்தி பேசுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, சும்மா டஜன் கணக்கா என்ன என்னமோ அவுத்துவிடுவோம்.
பக்கத்துல இருக்குற நம்மாளு அதுக்கு ஜால்ராகூட அடிப்பார். ஆனால் அவராலே தன்னப் பத்திதான் கதை போகுதுன்னு கண்டே பிடிக்க முடியாது. இதுக்கெல்லாம் அவார்டு ஏதாவது கொடுத்தா உலகத்துல வேற எந்த நாடும் நம்மை ஜெயிக்கவே முடியாது. நம்மாளுக இதுல பயங்கர ஸ்ட்ராங்க். பில்டிங் மட்டுமில்லங்க; பேஸ்மெண்டும்தான்.
அஞ்சான்: இவனுக்கு எதைப் பற்றியும் கவலையே கிடையாது. யார் என்ன சொன்னாலும் அதை சட்டையே பண்ணாம இவன் பாட்டுக்கு இவன் இஷ்டத்துக்குப் போயிட்டே இருப்பான். எத்தனையோ பொண்ணுங்க பின்னாடி போய் நூல் விட்டுப் பார்ப்பான், ஆனால் எல்லாருட்டயும் பல்பு மட்டும்தான் வாங்கியிருப்பான். அவன்ட்ட கேட்டால் செம மாஸ் மாமூன்னு ரொம்ப கூலாச் சொல்வான். செருப்படி வாங்கினா கூட சுவீட் வாங்குன மாதிரி க்யூட்டா காமிச்சிக்குவான். இந்த மாதிரி பையன்களை அஞ்சான்னு அசால்ட்டா சொல்றாங்க அவனோட ஃப்ரண்ட்ஸ்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: எக்ஸாமைக் கிலோக் கணக்கான பேப்பரில் எழுதியிருப்பாங்க. ஆனால் பூதக் கண்ணாடியே வைச்சுப் பார்த்தாலும் அதில் ஒரு விஷயம்கூடத் தேறாது. பிரதமரப் பத்திக் கேள்வி கேட்டிருந்தால், அவுங்களுக்குத் தெரிந்த அடப்பிரதமனப் (பாயாசம்) பத்தி எழுதிக்கொண்டே போவார்கள். அது நீயா நானா மாதிரி நீண்டுகிட்டே போகும். எப்போ முடியும்னு யாருக்குமே தெரியாது. இப்படி எழுதப்பட்ட எக்ஸாம் பேப்பரை எல்லாரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு சொல்றாங்களாம்.
முண்டாசுப்பட்டி: தம்பிக்கு இடம் பொருள் ஏவலே கிடையாது. மனசுக்குப் பிடிச்ச பொண்ண எங்க பார்த்தாலும் காதலிக்க ஆரம்பிச்சிருவார். ஆஸ்பத்திரி, சுடுகாடு இப்படிப் பார்க்கிற இடங்களில் எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியான, கலரான பொண்ணு கிடைச்சா போதும் மனசுக்குள்ள டூயட் பாடிட்டே, அந்தப் பொண்ணு கூட ஆஸ்திரேலியாவிலயோ ஹாங்காங்லயோ ட்ரீம் சாங்குங்கு ஸ்டெப் போடுற பையன் இவர். என்ன ஒண்ணு இவருக்கு ஃபோட்டோன்னா அலர்ஜி. யாராவது ஒரு பொண்ணு சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்னு சொன்னா போதும், தம்பி பதுங்கிருவார்.
ஜிகர்தண்டா: இவர் நம்ம வடிவேலு மாதிரி. ஊருக்குள்ள பெரிய பெரிய ரவுடிக்கெல்லாம் தலைவன் மாதிரி பீத்திக்குவார். ஆனா பார்ட்டி உண்மையில் சரியான தொடைநடுங்கி. ஏதாவது பிரச்சினைன்னா செமயா ஊடு கட்டுவார். ஆனால் களத்துல இறங்க வேண்டிய நிலைமை வந்துச்சுன்னா போதும் பார்ட்டி எப்படித்தான் எஸ்கேப் ஆகுறார்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு ஸ்பீடா பறந்துருவார். சும்மா புழுதி மாதிரி கண்ணு முன்னாலயே காணாமப் போயிருவார்.
சதுரங்க வேட்டை: இவர் விதவிதமா ஏமாத்துவார். அம்மாவுக்கு சீரியஸ்னு புரபஸர்ட்ட பொய் சொல்லி காசு வாங்கி ஃப்ரண்டோஸோட ஜாலியா நூன் ஷோ போயிருவார். எக்ஸாம் ஹாலுக்குப் போனாப் போதும். டெஸ்க பார்த்து எழுதியே ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸாயிருவார். எக்ஸாமினர்ட்ட போயி மூலையில உள்ள மோகனா உங்க ஃபோட்டாவை தன்னோட மொபைலில் ஸ்கீர்ன்சேவரா வச்சிருக்குன்னு ஒரு பிட்ட போடுவார். பிறகென்ன எல்லாரும் ரொம்ப ஃப்ரியா பிட் அடிக்கலாம். எக்ஸாம் முடிஞ்ச அரை மணி நேரம் கழிச்சுதான் எக்ஸாமினருக்கு என்ன நடந்ததுன்னே புரிஞ்சிருக்கும். அந்த அளவுக்குப் பேசிப் பேசியே ஆட்கள உஷார் பண்ணுற ஜகஜ்ஜால கில்லாடி இவர்.

காதல் முக்கியமா? காதலி முக்கியமா?

காதல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று: அது தெய்வீகமானது, காலத்தால் அழியாதது, மரணத்தால் மறந்துவிடாதது, பிறவிக்குப் பிறவி தொடர்ந்து வருவது. இது காதலர்களின் பார்வை. இரண்டு: அது பொய்யானது. இளம் மனங்களை ஆக்கிரமித்து அலைக்கழிக்கும் ஒரு மாயை அது. பெரும் துன்பத்தையும் பேரழிவையும் தரவல்லது. இது பெற்றோரது பார்வை. உண்மையில் இவை இரண்டுமே தவறான பார்வைகள்.
காதல் என்று அழைக்கப்படும் இந்த உணர்வு மிகவும் வலிமை வாய்ந்த ஆழ்மனச் சக்தி. மனிதன் வளர்ந்துகொண்டிருக்கிறான். அவனுடைய பரிணாம வளர்ச்சி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காதல் உணர்வு இந்த அக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறப்பைப் போன்றது இது. மனித மனத்தில் தன்னுணர்வு தீவிரம் அடைந்து சுயம் விழித்தெழும் முறைபாட்டில் இந்த உணர்வு பெரும் முக்கியத்துவம் கொண்டது. இந்த வலிமை மிகுந்த சக்தியின் ஆதிக்கத்திற்கு இளையவர்கள் ஆட்படும்போது பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் வல்லமை இன்றிக் குழப்பத் திற்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் ஏதோ பெரும் தவறு செய்வதாகக் கருதி அதை ஆட்சேபிக்கி றார்கள்.
காதல் வயப்பட்ட நிலையில் ஒரு பக்கம் மனத்தின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழும் மகிழ்ச்சியும், மறுபுறம் ஆழமான வேதனையும் மாறி மாறி அலைக் கழிக்கும் போது இளை ஞர்கள் தத்தளிக் கிறார்கள். சமூகப் பொறுப்பு சிறிதும் இல்லாமல், வெறும் வியாபாரம் மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள திரைப்படங்களும், வியாபாரப் பத்திரிகைகளும் காதலை ஒரு வணிகச் சாதனமாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில் காதலின் உண்மையான முக்கியத்துவம் அறிந்துகொள்ளப்படாமல் போகிறது. அக வளர்ச்சியில் காதல் வகிக்கும் பங்கு பற்றி இப்போது இருக்கும் புரிதல் முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்துகொண்டாலே போதுமானது. இந்த விஷயம் பற்றிய புதிய சிந்தனைக்கு இது வழிவகுக்கும்.
வாசகர் கேள்விகளுக்கான பதில்கள்
1. நான் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். இந்த வயதில் வருவது காதல் இல்லை ஒருவித Attraction னு சொல்லுவாங்க. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் என்னாலயும் காதல் பண்ணாமல் இருக்க முடியலை. நான் பத்தாவது படிக்கும்போது என்னுடன் படிக்கும் பெண்ணை காதலித்து ஏமாந்தவன். பிரச்சனை என்னவென்றால், நான் மீண்டும் என்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அக்காதலை தவிர்க்க நினைக்கின்றேன். ஆனால் என்னால் இயலவில்லை. எனது பள்ளி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக இருக்கும் அக்காதலை தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?
காதல் என்னும் உணர்வு அன்பின் ஒரு விதமான வெளிப்பாடு. நமக்கு நம் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பது முக்கியம். நம்மை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதபோதுதான் இன்னொருவர் நம்மை ஏற்றுக்கொள்வது முக்கியமாகப் போய்விடுகிறது. உங்களை உங்கள் குற்றம் குறைகளோடு உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? அன்பு செலுத்த முடிகிறதா? முடிகிறது என்றால் உங்களால் அந்தப் பெண் இல்லாமல் வாழ முடியும். நீங்கள் உங்களுக்குக் கொடுத்துக்கொள்ளாததை வேறு யார் கொடுத்து விட முடியும்? உங்கள் மீது நிபந்தனைகள் அற்ற அன்பு செலுத்துங்கள். பிரச்னை தீரும்.
2. எனக்கு 24 வயது ஆகிறது. என்னுடைய பழைய காதல் முறிந்து ஒரு வருடம் ஆகிறது. அந்தக் காதல் முறிவு ஏற்படுத்திய காயத்தால் மறுபடியும் எப்போதும் காதலிக்கவே கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன். ஆனால், இப்போது என் பணியிடத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. ஆனால், அவளுக்கும் ஏற்கெனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. அதை அவள் என்னிடம் சொல்லியதில் இருந்தே அவள் மீதான என் காதல் தொலைந்துவிட்டதைப் போல் உணர்கிறேன். அவளைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் இந்த உணர்வு என்னை விட்டு மறையாது என்று தோன்றுகிறது. அவளை மறந்துவிடுவதா, இல்லை என்ன செய்வது என்று ஆலோசனை கூறுங்கள்.
உங்களுக்குக் காதலைவிடக் காதலி முக்கியம் என்று படுகிறது. இந்த மனப்பாங்கு மனத்தில் முரண்பாட்டையும் சிக்கலையுமே விளைவிக்கும். காதல் திருமணங்கள் மணமுறிவுக்கு உள்ளாவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.
நீங்கள் இப்போது இருக்கும் மனநிலை இரட்டைக் கட்டு (double bind) என்னும் ஒரு மனநிலை. இருந்தாலும் தொல்லை, விட்டாலும் வேதனை என்பது போன்ற நிலை இது. சிந்தனையளவில் இந்த இரட்டைக் கட்டு நிலைக்குத் தீர்வு கிடையாது, மனத்தை ஒரு சுழலுக்குள் இழுத்துச் சென்று செருகிவிடக்கூடிய ஆபத்து இதில் இருக்கிறது.
உண்மையில் உங்களுக்குள் நீங்களே அறியாமல் நடந்துகொண்டிருப்பது இதுதான். உங்கள் மனத்தில் ‘காதலி’ என்ற ஒரு பிம்பம் இருக்கிறது. அதை அனுபவம் கொள்வதற்கு வெளியுலகில் ஒரு பெண் தேவை. அந்த பிம்பம் உங்கள் சுயமனப் படத்தின் பகுதியாகும். ’காதலி’ என்னும் அந்தப் பிம்பம் இல்லாமல் உங்கள் சுயமனப் படம் முழுமையற்றதாகிவிடும். அதனால் உங்களுக்கு ஒரு காதலி தேவை என்று ஆகிவிடுகிறது. இந்த மனநிலையில் இருந்து விடுபடாத வரையில் ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழும் வாழ்க்கை முரண்பாடு நிறைந்ததாகவே இருக்கும்.
இப்போது உங்களுடன் பணிபுரியும் அந்தப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்துகொள்வதா வேண்டாமா என்பதல்ல விஷயம். உங்கள் மனச் சிக்கலில் இருந்து நீங்கள் விடுபடாமல் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் மனத்தளவில் அந்தப் பெண்ணை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் இருவரின் வாழ்க்கையும் வேதனை நிறைந்ததாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
திருமணம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால் உளவியல் ஆலோசகர் ஒருவரை நீங்கள் சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று படுகிறது.
- ஆனந்த் கிருஷ்ணா, 
உளவியல் ஆலோசகர் 

Thursday, 18 September 2014

இங்கிதம் தெரிந்தவரா நீங்கள்?

1

எடிகட் (Etiquette) என்றால் இங்கிதம் என்று சொல்லலாம். பொதுவாகவே இது அனைவருக்கும் தேவை. ஆனால் குறிப்பாகச் சில பதவிகளுக்கு அது மிக மிக அவசியம்.
எனவே வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் யாருக்கு போதிய எடிகட் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கவும் சைகோமெட்ரிக் தேர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எடிகட் என்றால்?
பிறர் பார்க்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் எடிகட். அதாவது நம் நடவடிக்கை எப்படி இருக்கிறது, நம் பேச்சு எப்படி இருக்கிறது என்பதுதான். பொதுவாக எடிகட் எனும்போது நல்ல எடிகட்களைத்தான் குறிப்பிடுகிறோம். ‘’அவர் எடிகட் தெரிஞ்சவர்’’ என்றால் அவருக்கு நல்ல எடிகட்கள் உள்ளன என்றுதான் அர்த்தம்.
நல்ல எடிகட் இருந்தால் அவர் ஓர் உத்தமர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. நீங்கள் மனதளவில் சிறந்தவராக இருந்தாலும் பிறரிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் உங்களுக்கு எடிகட் போதவில்லை என்றுதான் அர்த்தம். மாறாக மனதில் நீங்கள் ஒரு வில்லனாகவே இருந்தாலும் வெளிப்படையாக நடந்து கொள்ளும் முறையில் மிகவும் இங்கிதமானவராக இருந்தால் உங்களுக்கு எடிகட் இருக்கிறது என்றுதான் பொருள்.
கம்பெனிக்கான இங்கிதம்
வெளிப்படையாகவே பேசுவோமே. நிறுவனங்களைப் பொறுத்தவரை நீங்கள் மனதளவில் உத்தமராக இருப்பதைவிட, எடிகட் நிறைந்தவராக இருப்பதைத்தான் அதிகம் விரும்பும். ஏனென்றால் சமுதாயத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி.
எனவே எடிகட் உள்ளவர் களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு நிறுவனமும் ஆசைப்படுவது உண்மை. இதை அறிவதற்காகவும், சைகோமெட்ரிக் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆக நாகரிகமாக நடந்துகொள்வது என்பது இன்று மிக முக்கியமான ஓர் அம்சம்.
இங்கிதக் கேள்விகள்
“வாடிக்கையாளரை முன்தினம் மாலை சந்திப்பதாக அறிவித்திருந்தீர்கள். ஆனால் ஒரு அவசர வேலை காரணமாக அவரை அன்று சந்திக்க முடியவில்லை எனில் என்ன செய்வீர்கள்?
அ) அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அடுத்த சந்திப்பு எப்போது என்பதை உறுதிப்படுத்துவேன்.
ஆ) அவராகவே என்னைத் தொடர்புகொள்ள வாய்ப்பு உண்டு. அப்படித் தொடர்பு கொள்ளும்போது என்னால் வர முடியாமலிருப்பதற்கு வருத்தம் தெரிவிப்பேன்.
இ) ‘எதிர்பாராத காரணங்களால் சந்திக்க இயலவில்லை’ என்று மின்னஞ்சலில் செய்தி அனுப்புவேன்.
வாடிக்கையாளரின் கோணத்திலிருந்து பார்த்தால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிலின்படி நீங்கள் நடந்து கொள்வது நல்ல எடிகட் அல்ல. இவற்றை அவரால் முழுமையாக ஏற்க முடியாது.
இப்போது அடுத்த கேள்வி. பல நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளோடு ஒரு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அவர்களில் ஒருவர் உங்களை ஒரு கேள்வி கேட்கிறார். பதிலளிக்கும்போது உங்கள் பார்வை எப்படி இருக்கும்?
அ) கேள்வி கேட்டவரைப் பார்த்தபடிதான் பதிலளிப்பேன்.
ஆ) அது ஒரு விஷயமே அல்ல. சரியான பதில் வேண்டும் அவ்வளவுதானே? எனவே தரையில் பார்த்தபடிகூட பதிலளிப்பேன்.
இ) பதிலளிக்கத் தொடங்கும்போது கேள்வி கேட்டவரைப் பார்ப்பேன்.அந்தப் பதிலைத் தொடர்ந்து கூறும்போது எதிரிலுள்ள மற்றவர்களையும் பார்ப்பேன்.
இந்த மூன்றாவது பதில்தான் எடிகட் நிறைந்த செயல்பாடு. தவிர தரையில் பார்த்துக் கொண்டு பேசுவது பலவித சந்தேகங்களை ஏற்படுத்தும். சில சமயம் எதிராளியைத் தவிர்க்க நினைக்கும்போதும், அவரிடம் அச்சம் உண்டாகும்போதும்கூட தரையைப் பார்த்தபடி பேசுவோம். இவையும் எதிர்மறை இமேஜைதான் உண்டு பண்ணும்.
ஒரு வாடிக்கையாளர் உங்களை நோக்கி வருகிறார். உங்கள் எதிரில் மூன்று காலி நாற்காலிகள் உள்ளன. என்ன செய்வீர்கள்?
அ) கண் ஜாடை மூலமாகவே அவரை உட்காரச் சொல்வேன்.
ஆ) எதிரில் இருக்கும் மூன்று நாற்காலிகளைச் சுட்டிக் காட்டி “உங்களுக்கு வசதியான நாற்காலியில் அமருங்கள்’’ என்பேன் பவ்யமாக.
இ) ஒரு குறிப்பிட்ட நாற்காலியைச் சுட்டிக் காட்டி “தயவுசெய்து உட்கார்ந்து கொள்ளுங்கள்’’ என்பேன்.
மேலோட்டமாகப் பாரத்தால் இந்த மூன்றுக்குமே பெரிய வித்தியாசம் இல்லாததுபோல தோன்றலாம். மூன்றிலுமே நாகரிகமாகத்தானே நடந்து கொள்கிறோம்? அதாவது உட்காரச் சொல்கிறோம்.
ஆனால் கண் ஜாடை மூலம் உணர்த்துவது என்பது கொஞ்சம் ‘சீப்’பாகத் தன்னை நடத்துவதான எண்ணத்தை எதிரில் இருப்பவருக்கு ஏற்படுத்தலாம்.
எனவே உங்கள் தேர்வு முதல் விடையாக இருந்தால், நீங்கள் போதிய எடிகட் இல்லாதவராகக் கருதப்படுவீர்கள்.
மூன்று நாற்காலிகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரச் சொல்வது வாடிக்கையாளருக்கு ஒரு தற்காலிக சங்கடத்தைத் தரலாம். எதில் உட்காருவது என்று முடிவெடுப்பதில் ஒரு சிறு தயக்கம் ஏற்படக் கூடும்.எனவே மூன்றாவது பதிலில் உள்ள செயல்பாடுதான் எடிகட்டைப் பொறுத்தவரை தேர்ச்சி பெறுகிறது.

Wednesday, 17 September 2014

நீங்கள் கடன் கொடுத்தவரா? வாங்கியவரா?

2
ஆண்டவராகிய கடவுள் எப்போதுமே ‘மன்னிக்கிறவராக’ இருக்கிறார், ஆனால் அவரது படைப்பாக இருக்கும் மனிதர்கள் அவரைப்போல் எப்போதும் மன்னிப்பதில்லை என்று சங்கீதப் புத்தகம்(86:5) குறிப்பிடுகிறது.
நம் உறவுகளோ, நண்பர்களோ, நமக்கு எதிராக செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்காவிட்டால், மனக்கசப்பு உருவாகும். இறுதியில் அவர்கள் செய்த தவறுகள் மன்னிக்கவே முடியாததுபோல் நமக்குத் தோன்றும்.
இதனால்தான் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் தவறுகளை, காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் மன்னிக்க வேண்டும் என்கிறது விவிலியம். குறிப்பாக ரத்த உறவுகள் செய்யும் தவறுகளை எத்தனை விரைவாக மன்னிக்க முடியுமோ அத்தனை விரைவாக மன்னிப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அமைதியைக் கொண்டுவரும்.
அதனால்தான் “ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என கொலோசெயர்(3:13) எடுத்துச் சொல்லுகிறது.
குடும்ப வாழ்வில், தம்பதியர் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். மாறாக தவறுகளை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் என்றோ, நான் சொல்வதை நீ காதுகொடுத்துக் கேட்பதே இல்லை என்றோ பரஸ்பரம் குத்திக்காட்ட மாட்டார்கள்.
“குற்றத்தை மன்னிப்பது மகிமை” என்பதைக் கணவன், மனைவி இருவருமே நம்புவார்கள் என்கிறது நீதிமொழி(19:11). ஆனால் இந்த மகிமையை பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தபிறகே பலரும் உணரத் தலைப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே பேசா மடந்தைகளாகிவிடுகிறார்கள்; வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகளை மதிக்காத கல்நெஞ்சக்காரர் ஆகிவிடுகிறார்கள். பாசமோ பிணைப்போ இல்லாத ஒரு பந்தத்திற்குள் சிக்கிவிட்டதாக இருவரும் நினைக்கிறார்கள்.
ஆனால் ஒருவருக்கு ஒருவர் தவறிழைத்து விட்டதாக நினைத்தால் அதை மறப்பதும் மன்னிப்பதும், இல்லற வாழ்வை இன்னும் இனியதாக்கி விடுகிறது.
மன்னிப்பின் அவசியத் தேவை
நம்மைப் புண்படுத்துகிறவர்கள் அல்லது நமக்கு எதிராக பாவம் இழைப்பவர்கள் யாராயினும் அவர்களை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான் சமாதானத்தின் அமைதி உங்களை ஒரு அரணாகக் காக்கும்.
மற்றவர்கள் எத்தனை முறை புண்படுத்தினாலும் அத்தனை முறையும் மன்னிப்பதே உயர்ந்தது. மன்னிப்பதே மனித இனத்தின் மகத்தான குணமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கதை மூலம் விளக்கினார் இயேசு.
கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தமுடியாமல் அல்லல் பட்டுவந்த ஒரு அடிமையைப் பற்றிய கதை அது.
அரசனும் அடிமையும்
ஓர் அடிமை தன் ராஜாவுக்கு ஆறு கோடி தினாரி கடன்பட்டிருந்தான்; ஆறு கோடி நாட்கள் அவன் வேலை செய்தால்தான் அந்தக் கடனை அவனால் அடைக்க முடிந்திருக்கும் என்பது யதார்த்தம்.
அவன் நிலையை உணர்ந்த ராஜா அவ்வளவு பெரிய கடனை ரத்து செய்தார். அத்தனை பெரிய கடனிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த அடிமையோ, தனக்கு வெறுமனே நூறு தினாரி கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித் தரச்சொல்லி அவன் கழுத்தை நெரித்தான்.
அவனோ, கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் கடனைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லி, அவன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்; அவனது கண்ணீருக்கு இரங்காத அந்த அடிமை தன் சக அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான்.
இதைக் கேள்விப்பட்ட ராஜா கொதித்துப்போனார். “நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று அவனிடம் கோபத்துடன் கேட்டார். பிறகு, “அவன் எல்லாக் கடனையும் அடைக்கும்வரை சிறைக் காவலர்களிடம் அவனை ஒப்படைத்தார்”(மத்தேயு-18:21-34).
மேலும் இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபின் “அவ்வாறே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை மனமார மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் சொன்னார்(மத். 18:35).
மன்னிப்பதே ஆரோக்கிய வாழ்வு
மன்னிக்கும் மனம் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது, உறவுகளில், தோழமையில் விரிசல் உண்டாகிறது. தகவல் தொடர்பு அறுந்துவிடுகிறது.
தாராளமாய் மன்னிக்கும்போதோ அநேக நன்மைகள் விளைகின்றன. மோசமான உடல்நிலைக்குக் காரணமாய் இருக்கிற மனக் கொந்தளிப்புகள், குமுறல்கள் ஆகியவற்றுக்கு மாபெரும் வடிகாலாக மன்னிப்பு அமைகிறது; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது, அடுத்துவரும் நாட்களை மகிழ்ச்சியின் தொடர்ச்சி
மிக்கதாக மாற்றிவிடுகிறது. நீங்கள் மன்னிக்காதவர் எனில் நீங்கள் வராக்கடன்களின் அதிபதி. வராக்கடன்கள் உங்கள் பேரேட்டில் இருந்தாலும் அவை உங்கள் பொக்கிஷ அறையில் இருப்பதில்லை. அவற்றால் உங்களுக்குப் பயனில்லை.
மன்னிப்பவர் எனில் உறவுகளின், நண்பர்களின் வரவு உங்கள் பொக்கிஷத்தை ரத்தினங்கள்போல் ஜொலிக்கச் செய்கிறது.
நீங்கள் மன்னிப்பதன் மூலமே உங்களை மன்னிப்பவராக இருக்கும் பரலோகத் தந்தையுடன் உங்களுக்கான பந்தத்தை உறுதி செய்கிறது. நீங்கள் கடன் கொடுத்தவரா? வாங்கியவரா? சிந்திப்போம்.

மானிடராய் பிறத்தல் அரிது!

உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10
உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10
உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10
உலகில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். நாள் ஒன்றுக்கு 3,000 பேர் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்படி மடிகின்றனர். 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறந்து போவதற்கான காரணங்களில் தற்கொலை இரண்டாவது காரணமாக இருக்கிறது.
நம் நாட்டில் லட்சத்துக்கு 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 % தற்கொலைகள். இதில் 40 % பேர் ஆண்கள், 60 % பேர் பெண்கள்.
ஏன் இந்த எண்ணம்?
நமது முன் மூளைப் பகுதி மூளையின் மற்றப் பகுதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மனம், எண்ணம், எழுச்சி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைந்து மனிதனை வாழ வைக்கிறது.
இந்த ஒருங்கிணைந்த மூளைச் செயல்பாட்டில் சுற்றுச்சூழல் தாக்கமும், உடல் உள்ளுணர்வு தாக்கமும் எல்லைமீறும்போது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. அது தீவிரமடையும்போது ஒருவரது மனம் அவசர முடிவு எடுத்துத் தற்கொலை அரங்கேறி விடுகிறது. தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் 20-ல் ஒருவர் இறந்து விடுகிறார்.
காரணங்கள்
தற்கொலை எண்ணம் ஏற்பட முக்கியக் காரணம் மனநோய்களும் நரம்புக் கோளாறுகளும். அடுத்ததாக மதுப் பழக்கம், போதைப்பொருள் பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம், தகாத பாலுறவு, சீட்டு விளையாடுதல், திருட்டு, சமூகவிரோத குணம், கடன் வாங்குதல் உள்ளிட்டவை தற்கொலையைத் தூண்டுகின்றன.
இதைத் தவிர வேலையின்மை, வீட்டுச் சண்டை சச்சரவு, கடன் தொல்லை, பரீட்சை தோல்வி, வேலை செய்யும் இடங்களில் சித்திரவதை, குடும்பங்களில் சித்திரவதை, இளம்வயது திருமணங்கள், பாலியல் தொந்தரவுகள் ஆகியவையும் தற்கொலைக்குக் காரணங்கள்தான்.
இன்றைக்கு அதிகச் செல்போன், வலைத்தள பயன்பாடும்கூடத் தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கிடைக்கும் எந்தச் சூழ்நிலையையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள்.
தடுப்பு நாள்
தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேசத் தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது அனுசரிக்கப்படுகிறது.
இந்த 12வது உலகத் தற்கொலை தடுப்பு நாளின் மையக் கருத்து ‘தற்கொலைத் தடுப்பில் ஒருங்கிணைந்த செயலாக்கம்'.
நம் பங்கு
தமிழகத்தில் மனநோய்களுக்கான மருத்துவச் சிகிச்சை நடமாடும் மாவட்ட மனநலத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே மனநல மாற்றம் காரணமாக ஏற்படும் தற்கொலை எண்ணத்தைத் தடுக்க உரிய மருந்துகளை இலவசமாகப் பெறலாம்.
மேலும் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 104 மருத்துவ ஆலோசனை உதவி எண் மூலம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெளிவு பெற முடியும். சமூகத்தில் நடக்கும் தற்கொலைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒரு சமூகமாக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.
தனிமைப்பட்டு இருப்பவர்களிடம்தான் அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளைப் பெருமளவு தடுக்க முடியும்.
இலவச உளவியல் ஆலோசனை
தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060 நேரடியாக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028
மின்னஞ்சல் தொடர்புகொள்ள: help@snehaindia.org
புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அணுகலாம். முகவரி: 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001
கட்டுரையாளர் மூளை நரம்பியல் பேராசிரியர், 
வலிப்பு நோய் நிபுணர் 
தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்


3
பகவத் கீதை உரைக்கு முன்னுரை எழுதிய பாரதியார் முதல் பக்கத்திலேயே பைபிளிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டுகிறார்.
“நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்” என்னும் இயேசு பிரானின் வார்த்தைதான் அது.
இதே வார்த்தையைப் பல ஆன்மிக ஞானிகளும் தத்துவ வாதிகளும் சொல்வதைக் கேட்டிருப் போம். கவிஞர்கள்கூட இதையே சொல்கிறார்கள்.
குழந்தைகளைப் போல் ஆவது என்றால் என்ன? நமது அறிவு, அனுபவங்கள், சிந்திக்கும் ஆற்றல், திறமைகள், லட்சியங்கள், உணர்ச்சிகள், கடமைகள் எல்லாவற்றையும் துறந்து விட்டுக் குழந்தைகளைப் போல இருப்பதா? அப்படி இருப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும்.
அது தேவையா? குழந்தை வளர்ந்து பெரியவர் ஆவதுதானே இயல்பு? இயற்கையின் இந்தச் செயல் முறையை மாற்ற முடியுமா? மாற்றுவது அவசியமா?
செடி மரமாகும். அந்த மரம் மீண்டும் செடியாகாது. ஆனால் அந்த மரத்திலிருந்து கிடைக்கும் விதை இன்னொரு செடியை உருவாக்கும். இதுதானே மனிதர்கள் வாழ்வும்? எனில் மனிதர்கள் மட்டும் ஏன் மீண்டும் குழந்தைகளாக வேண்டும்?
அம்மாவின் நினைப்பு எப்போது வரும்
ஞானிகளும் கவிஞர்களும் சொல்லவருவது வேறு. இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் அழகாக விளக்குகிறார். வழக்கம்போல ஒரு குட்டிக் கதை மூலம்.
குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு அம்மாவின் நினைப்பே வருவதில்லை. விளையாடும்போது கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறது. உடனே அம்மா என்று கத்துகிறது. அம்மா ஓடி வந்து கவனிக்கிறார். மருந்து போட்டு சமாதானப்படுத்துகிறார்.
குழந்தை மீண்டும் விளையாட ஆரம்பிக்கிறது. அதற்கு திடீரென்று பசிக்கிறது. சொல்லத் தெரியவில்லை. உடனே வீல் என்று கத்துகிறது. கையிலிருக்கும் விளையாட்டுப் பொருள்களை வீசி எறிகிறது. அம்மா ஓடி வருகிறார். விஷயம் புரிகிறது. உணவை ஊட்டுகிறார். குழந்தை நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடுகிறது.
எழுந்ததும் ம்மா என்று ஒரு சத்தம். அம்மாவின் வருகை. பிறகு அமைதி. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் ம்மா… வேறு ஏதோ பிரச்சினை. மீண்டும் அம்மாவின் உதவி.
இந்தக் குழந்தைபோல நீங்கள் ஏன் கடவுளிடம் நடந்துகொள்ளக் கூடாது என்று ராமகிருஷ்ணர் கேட்கிறார். தன்னால் முடிந்தவரை எதையோ செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய சக்தியின் எல்லையை உணர்ந்ததும் உடனே அம்மாவை அழைக்கிறது. முழு நம்பிக்கையுடன் அழைக்கிறது.
அம்மா வருவார் என்பதிலோ தனக்கு வேண்டியதைச் செய்வார் என்பதிலோ குழந்தைக்குத் துளியும் சந்தேகமில்லை. ஒரு குழந்தை தாயை நம்புவதுபோல நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? அப்படி நம்பி அழைக்கிறீர்களா? அப்படியானால் குழந்தைக்கு உதவத் தாய் வருவதுபோல பக்தனுக்கு உதவ இறைவன் வருவான் என்கிறார் ராமகிருஷ்ணர்.
குழந்தைகளைப் போல நடந்துகொள்வதில் இது ஒரு விதம். உள்ளத்தைக் குழந்தைகளைப் போல மாசற்றதாக, தன் முனைப்பு அற்றதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள். பாரதியார் சொல்வதைக் கேளுங்கள்:
“‘குழந்தைகளைப் போலாகிவிடுங்கள்’ என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங் களையெல்லாம் மறந்துவிடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைப் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள் என்பது கொள்கையன்று. ‘ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்பது கருத்து.”
தூய மனமே குழந்தைநிலை
தூய மனத்துடன், முழுமையான நம்பிக்கையுடன் இறைவனை அணுகுவதே குழந்தையின் மனதோடு இருத்தல். இத்தகைய ‘குழந்தை’களை மணிவாசகர் சொன்னதுபோல, “தாயினும் சாலப் பரிந்து” காப்பவர் இறைவன் என்பதே ஞானிகள் வாக்கு.

இயேசு சொன்ன போதனைக் கதைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இறை மைந்தன் இயேசு பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்தபோது, மக்கள் நலமுடன் வாழ வழிவகுக்கும் நல்ல போதனைகளைக் கூறினார். இவற்றை ஏழைப் பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், இனிய கதைகளின் மூலம் போதித்தார். அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.
மனம் திருந்திய மைந்தன்
ஒரு செல்வந்தர் தன் இரு குமாரர்களுடன் வாழ்ந்து வந்தார். அவரது மூத்த மகன் தன் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, வயல் வேலைகளையெல்லாம் செய்து வந்தான். இளையவனோ, தந்தையின் சொத்துக்களில் தனது பங்கைப் பிரித்துத் தரும்படி வற்புறுத்திப் பெற்றான். பின்னர், தந்தையை விட்டுப் பிரிந்து, தூர தேசம் சென்று துன்மார்க்கமாய் வாழ்ந்து, தன் ஆஸ்தி அனைத்தையும் அழித்துப்போட்டான்.
அப்போது அந்த தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டானது. உண்ண உணவுமின்றித் தவித்த அவன், வேலை தேடி அலைந்தான்.
அந்த தேச.குடிமகனான ஒருவன், தன் பன்றிகளை மேய்க்கும் வேலையை அவனுக்குக் கொடுத்தான். பசியின் கொடுமையால் அந்த பன்றிகள் தின்ற தவிட்டையாவது சாப்பிட்டுத் தன் வயிற்றை நிரப்ப அவன் ஆசைப்பட்டான். ஆனால் அது கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.
தனது பரிதாப நிலையை உணர்ந்த அவன், “ என் தகப்பனுடைய கூலிக்காரர்கள் அநேகர் உண்டு. அனைவருக்கும் நிறைவான உணவு உண்டு. நானோ பசியினால் சாகிறேனே” என வேதனையோடு புலம்பினான்.
மனம் வருந்திய அவன், ஒரு நல்ல முடிவுக்கு வந்தான். “நான் எழுந்து, என் தகப்பனிடம் சென்று, ‘தந்தையே, கடவுளுக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல், உம்முடைய குமாரன் என்று சொல்லப்பட நான் தகுதி உள்ளவனல்ல. எனவே, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்’ என்பேன்” என்று கூறினான்.
மனம் திருந்திய அம்மைந்தன், எழுந்து புறப்பட்டுத் தன் தகப்பனிடத்தில் வந்தான்.
அவன் தூர வரும்போதே, அவனுடைய தந்தை அவனைக் கண்டு, மனதுருகி, ஓடிவந்து, அவன் கழுத்தைக் கட்டி, அணைத்துக்கொண்டு, அவனை முத்தம் செய்தார்..
இளைய மகன் தகப்பனை நோக்கி, “தந்தையே, கடவுளுக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல், உம்முடைய குமாரன் என்று சொல்லப்பட நான் தகுதியுள்ளவனல்ல.” என்றான்.
ஆனால், அவன் மீதியைச் சொல்லி முடிப்பதற்குள், அவனுடைய தந்தை தன் வேலையாட்களை நோக்கி, “நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்கு காலணிகளையும் போடுங்கள்.
நல்ல விருந்து தயாரியுங்கள். நாம் விருந்துண்டு, மகிழ்வுடன் இருப்போம். ஏனெனில், என் குமாரனாகிய இவன் கெட்டழிந்து போனான். இப்போதோ, புது வாழ்வு பெற்றான். காணாமற்போனான். மீண்டும் வந்துவிட்டான்.” என்றார்.
அப்படியே அவர்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடத் தொடங்கினார்கள்.
இந்நிலையில், வயலில் வேலை செய்து முடித்த மூத்த மகன், வீடு திரும்பினான். கீத வாத்தியங்கள் முழங்கும் சத்தம் கேட்ட அவன், “இது என்ன?” என வேலையாள் ஒருவனை விசாரித்தான். நடந்தவற்றை அறிந்தபோது, அவன் கோபமடைந்து, வீட்டிற்குள் போக மனதில்லாதிருந்தான்.
இதையறிந்த அவன் தந்தை, வெளியில் அவனிடம் வந்து, அவனை வருந்தி அழைத்தார். அப்போது, மூத்த மகன் தந்தையை நோக்கி. “இதோ! இத்தனை ஆண்டுகளாய் நான் உமக்கு ஊழியம் செய்து வருகிறேன். உம் வார்த்தையை மீறாது நடந்து வரும் எனக்கு, என் சிநேகிதரோடு நான் மகிழ்வுடனிருக்க, நீர் ஒருமுறைகூட, ஓரு ஆட்டுக்குட்டியைக்கூட, எனக்குக் கொடுக்கவில்லை. ஆனால், வேசிகளிடத்தில் துன்மார்க்கமாய் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட, உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே, பெரிய விருந்தை ஆயத்தம் செய்தீரே” என்றான்.
அப்போது, அவன் தந்தை அவனை நோக்கி,”மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். என்னிடமுள்ள அனைத்தும் உன்னுடையது தானே! உன் சகோதரனான இவனோ, கெட்டழிந்துபோனான். இப்போதோ, புது வாழ்வு பெற்றான். காணாமற்போனான். மீண்டும் வந்துவிட்டான். எனவே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமே” என்றார்.
இயேசுவின் போதனை:
இக்கதையின் மூலம் இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன?
1. கதையின் தந்தையைப் போல, நம்மைப் படைத்த இறைவனும் நம் அனைவரையும் அளவில்லாமல் நேசிக்கிறார். அவருக்குச் சொந்தமான நாமோ, கெட்டுப்போன இளைய மைந்தனைப்போல, அவர் தரும் நல் வாழ்வின் வழிமுறைகளை விட்டு விலகி, தவறான வழியில் சென்று, நம்மையே கெடுத்துக்கொண்டோம். இதின் விளைவாக, இறைவன் அழகாய்ப் படைத்து, நமக்களித்த, இவ்வுலகத்தையும் கெடுத்து விட்டோம். நாமும், வருத்தம், வியாதி மற்றும் வேதனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்நிலையிலிருந்து விடுபட்டு, நாம் மீண்டுமாக நல்வாழ்வு பெற, இறைவன் விரும்புகிறார், இதற்கு, நாம் இறைவனிடம் மீண்டும் ஒப்புரவாக வேண்டும், அவர் காட்டும் நல் வழியைப் பின்பற்ற வேண்டும், இவ்வாறு நன்மக்களாக மகிழ்ந்து வாழ, இக்கதையின் இளைய மைந்தனைப்போல, நம் வாழ்வை மாற்றும் நல்லதொரு தீர்மானத்தை, இன்று எடுப்போமா?
2. இறைவன் மனிதர் அனைவரையும் தமது சாயலிலே அழகாகப் படைத்திருக்கிறார். அனைவரையும் நேசிக்கிறார். தீய வழியில் செல்பவர்களையும் அவர் நேசிக்கிறார். அவர்களும் திருந்தி நல்வாழ்வு பெற விரும்புகிறார். எனவே, அவர் வழியில் செல்லும் நாமும், இப்படிப்பட்டவர்களை நேசிக்க வேண்டும். அவர்கள் நல் வாழ்வு பெற, உதவி செய்ய வேண்டும். நாம் இக்கதையின் மூத்த குமாரனைப்போல, நேர்வழியில் நடந்தாலும்கூட, அது போதாது. அன்பில்லாதவ்ர்களாக, சுய நல எண்ணத்துடன் வாழக்கூடாது. எனவே இறைவனின் அன்பை உள்ளத்தில் கொண்டவர்களாய், அனைவர் மீதும் பாசமுள்ளவர்களாய் வாழுவோமா?