இறந்த நேசத்துக்குரியவர்களை மீண்டும் காண ஏங்கி கண்ணீர் துளிகள் சிந்தியிருக்காதவர்களே இருக்க முடியாது. உலக வாழ்க்கை என்ற காகித தாளில் காலம் என்ற எழுத்தாணி இறுதியாக இடும் முற்றுப்புள்ளி தான் மரணம். அதன் பின் நமக்கு வாழ்வுண்டா? நமக்குள் நாம் உணரும் சிந்தனை என்ற உயிர் என்னாகிறது?
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" - யோவான் 11:25
இதனை போத்திதவர் ஏசுநாதர். மரணம் உடலுக்கு உரியது உயிருக்கல்ல என்றார். உயிர்த்தெழுந்து காட்டி தன் வல்லமையை சீடர்கள் முன் வெளிப்படுத்திக் காட்டினார் இயேசுநாதர். இந்த நம்பிக்கையே 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.
ரஸ்ஸல் என்ற நாத்திக அறிஞர், "இறந்தப் பின் மண்ணோடு மண்ணாக நான் மக்க போகிறேன், ஒரு துளியும் என் உடலில் மிஞ்சப் போவதில்லை, என் வாழ்க்கை பயணம் அதோடு முடிந்து விட்டது என்பதே என் நம்பிக்கை" என்றார். நிச்சயமாக ஏசுநாதர் கூறியதை ரஸ்ஸல் நம்பவில்லை.
ஆதிகால கிறிஸ்தவர்கள் "இயேசு சிலுவை மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குள் உயிர்த்தெழுந்தார்" என்று எழுதினர். அவர்கள் அவரை கண்டதாக மட்டும் எழுதவில்லை, அவருடன் உண்டதாகவும், அவரை தொட்டதாகவும் அவருடன் 40 நாட்கள் செலவிட்டதாகவும் எழுதினர்.
 |
நம் இயேசு ஜீவிக்கிறார்! |
அதற்கு என்ன ஆதாரம்? இந்த நம்பிக்கை காலப்போக்கில் எழுந்த கட்டுக்கதையா அல்லது ஆதரங்களுடன் கூடிய உண்மை சம்பவமா? இந்த கேள்விக்கான பதிலே கிறிஸ்தவத்திற்கு அஸ்திவாரம்.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையானால் இறப்பிற்கு பின் நமக்குள்ள வாழ்வைக் குறித்து அவர் கூறியது அனைத்தையும் மனப்பூர்வமாக நம்பலாம். அவர் உயிர்த்தெழுந்தது உண்மை எனில் இறப்பிற்கு பின்பு உள்ள வாழ்வைக் குறித்து கூற அவர் ஒருவரே தகுதியுடையவர் ஆகிறார். ஆனால் அவர் உயிர்த்தெழவில்லை என்று கண்டு கொள்ளப்பட்டால் கிறிஸ்தவத்திற்கு எவ்வித பொருளும் இல்லை. ஒரு பொய்யை ஊண்டுகோளாக கொண்ட மார்க்கமே கிறிஸ்தவம் என்பது தெளிவாகும். இதனை பிரபல தத்துவ அறிஞர் ஆர்.சி.ரௌல் கீழ்க்கண்டபடி கூறினார்.
"உயிர்த்தெழுதலே கிறிஸ்தவத்திற்கு அடித்தளம். கிறிஸ்து உயிர்தெழுந்தது உண்மை எனில் அவரே பிற போதகர்களைக் காட்டிலும் நற்சான்றும் நம்பகத்தன்மையும் உடையவர் ஆகிறார். ஏனெனில் புத்தம் புத்தர் இறந்தார் என்கிறது, யூதம் மோசே இறந்தார் என்கிறது, இஸ்லாம் முகமது இறந்தார் என்கிறது ஆனால் கிறிஸ்தவத்தை பொறுத்த வரை கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்"
இந்த கட்டுரையில் இயேசு உயிர்த்தெழுந்தாரா என்ற தலைப்பில் தேடல் முடிவுகள் எழுதப்பட்டுள்ளது. உண்மை என்ன?
முன்னறிவித்தல்:
சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, தான் மறுதலிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிலுவையில் மரணமடைந்து மூன்று நாட்களில் உயிர்த்தெழ வேண்டும் என்று தன் சீஷர்களிடம் இயேசு முன்னறிவித்தார்.
"அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்" - மத்தேயு 16:21
இது ஒரு வியக்கத்தக்க முன்னறிவிப்பு. இந்த வார்த்தையை இயேசு செயல்படுத்த தவறினால் நிச்சயமாக அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பது அவரது சீஷர்களுக்கு புரிந்துவிடும். பைபிள் ஆராய்ச்சியாளர் வில்பர் ஸ்மித் இவ்வாறு கூறினார்,
"சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று ஏசுநாதர் கூறியது ஒரு முட்டாளின் கூற்று போல உள்ளது. சீடர்களிடம் இருந்து நம்பிக்கையை எதிர்ப்பார்க்கும் ஒரு நபர் எப்படித் தான் இத்தகைய வார்த்தையை துணிவுடன் கூறினார் என்பது புரியவில்லை. இந்த சொல்லை நிறைவேற்ற தவறினால் நிச்சயமாக ஒரு ஏமாற்றுக்காரனாவாரே. எந்த சமய போதகரும் இது போன்ற சொற்களை கூறியதில்லை"
கொடுமையான சிலுவை மரணம், அதன் பின்?
படத்தயாரிப்பாளர் மெல்கிப்சன் 2004-இல் வெளியிட்ட 'தி பேஷன் ஆப் தி க்ரைஸ்ட்' திரைப்படத்தைக் கண்டால் ஏசுநாதரின் இறுதி நேரங்கள் எவ்வளவு கொடுமையாக சென்றன என்பது புரியும்.
சீடர் யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்த பின் இயேசு கைது செய்யப்பட்டு யூதகுரு காய்பா முன் நிறுத்தப்படுகிறார். காய்பா அவரை ரோம ஆளுநர் பிலாத்துவிடம் குற்றப்படுத்த பிலாத்து ஏசுநாதருக்கு கசையடிகள் கொடுக்க உத்தரவிடுகிறார். இயேசுவின் சரீரம் அடிகளால் கிழிக்கப்படுகிறது. யூதர்கள் திருப்தி அடையாததால் இயேசுவை சிலுவையில் அறைய பிலாத்து ஒப்புக் கொண்டார். இதனால் இயேசு கொடூரமாக சிலுவையில் அறையப்பட்டார். பல்வேறு நிந்தனைகளும் வேதனைகளும் அனுபவித்து இறுதியில் "எல்லாம் முடிந்தது" என்று கூறி இயேசு ஜீவனை நீத்தார். அப்பொழுது பூமி இருண்டு நிலநடுக்கம் உண்டாகிறது. அதனால் அனைவரும் அஞ்சுகின்றனர்.
பிலாத்து இயேசு இறந்துவிட்டாரா என்று உறுதி செய்யும் படி உத்தரவிட போர்ச்சேவகர்கள் அவரது சரீரத்தை ஈட்டியால் குத்துகின்றனர். இறப்பு உறுதி செய்யப்பட்ட பின் இயேசுவின் உடலை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் கல்லறையில் வைத்து அதனை முத்தரையிட்டு 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இறைவனால் அனுப்பப்பட்ட மேசியா கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்ததை சீடர்களால் ஏற்க முடியவில்லை. இயேசுவின் மீது அவரது சீடர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அன்றே மறைந்தது. அவரது சீடர்கள் மீண்டும் சிதறி சென்றனர்.
என்ன நடந்தது?
ஆனால் அது முடிவல்ல. இயேசுவின் ஊழியப்பாதை முடியவில்லை, இன்றும் கிறிஸ்தவமே உலகின் முதல் மார்க்கமாக உள்ளது. எனவே இயேசுவின் சிலுவை மரணத்திற்கு பின் என்ன நடந்தது என்று உற்று நோக்க வேண்டியது அவசியம். நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் பீட்டர் ஸ்டீன்பெல்ஸ் என்ற எழுத்தாளார் கீழுள்ளவாறு எழுதுகிறார்,
"இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவரது சீஷர்கள் திடீரென ஒரு கூட்டமாக திரண்டு ஊர்ஊராக சென்று இயேசுவை குறித்து போதித்தனர். அச்செயல் தங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியது என்று அறிந்தும் அவர்கள் அவ்வாறு போதிக்க காரணம் என்ன? அவர்களது செயலால் ஒரு சாம்ராஜ்யமே தடம் புரண்டுள்ளது. என்ன நடந்திருக்கும்?"
இதற்கு புதிய ஏற்பாடு தரும் பதில் - இயேசுவின் உயிர்த்தெழுதல். உயிர்த்தெழுதல் நிகழ்ந்ததா என்ற வினா எழும்போது ஐந்தே பதில்கள் தான் உள்ளன. அந்த ஐந்து விடைகள் கீழே.
- இயேசு சிலுவையில் இறக்கவில்லை
- உயிர்த்தெழுதல் செய்தி ஒரு சதித்திட்டம்
- சீடர்களுக்கு பிரம்மை பிடித்திருக்கிறது
- உயிர்த்தெழுதல் காலப்போக்கில் எழுந்த கட்டுக்கதை
- உயிர்த்தெழுதல் உண்மையாக நடந்த சம்பவம்
இந்த ஐந்து பதில்களை சிறிது ஆராய்ந்தாலே உண்மையான பதில் வெளிப்பட்டுவிடும்.
1) இயேசு சிலுவையில் இறக்கவில்லை
சிலர் "இயேசு சிலுவையில் இறக்கவில்லை, அவர் உயிரோடு இருந்ததை அறியாமல் ரோமச் சேவகர்கள் அவரை கல்லறையில் வைத்துள்ளனர், கல்லறை துளைகள் வழியாக சென்ற காற்றோற்றத்தால் இயேசு சுவாசித்து பிழைத்திருக்க கூடும்" என்கின்றனர். இதனை மூர்ச்சை கோட்பாடு என்பர்.
மூர்ச்சை கோட்பாடு சாத்தியமற்றது. ஏனெனில் இயேசு இறந்துவிட்டாரா என்று உறுதிசெய்ய அவரது விலாவில் குத்திய போர்ச்சேவகன் வலது நுரையீரல் தாண்டி இதயமேலுரை வரை ஈட்டியை அழுத்தி இருக்கிறான். தண்ணீரும் இரத்தமும் குத்தப்பட்ட காயத்தில் இருந்து புறப்பட இதயமேலுரை வரை ஈட்டி ஏறவேண்டும். (தண்ணீர் என்பது இதயத்தின் மேலுறையில் இருக்கும் நீர் போன்ற திரவம்)
"ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது" - யோவான் 19:34
மருத்துவர்கள் மூர்ச்சை கோட்பாடை ஏற்பதில்லை. கசையடிகளால் காயப்படுத்தப்பட்டு சிலுவையில் பலமணி நேரம் தொங்கி இதயத்தை எட்டும் அளவிற்கு ஈட்டி ஏறி காயம் பட்ட நபர் பிழைக்க வாய்ப்பில்லை. மேலும் ரோம சேவகர்கள் அவரது மரணத்தை உறுதி செய்ததை சுவிசேஷ நூல்கள் கூறுகின்றன. இறந்ததை உறுதி செய்வதில் ரோம போர்ச்சேவகர்கள் அனுபவமிக்கவர்கள்.
அதுமட்டும் அன்றி கிறிஸ்தவர் அல்லாத சரித்திரவான்களாகிய ஜோசபஸ், லூசியன், தாதிசு ஆகியோரும் இயேசு இறந்தார் என்று எழுதியுள்ளனர். இதுவரை நம்மிடம் உள்ள அனைத்து கிறிஸ்தவ, ரோம, யூத கையேடுகளும் இயேசு இறந்து அடக்கம் செய்யப்பட்டார் என்றே கூறுகின்றன. இயேசு இறந்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
2) உயிர்த்தெழுதல் செய்தி ஒரு சதித்திட்டம்
எந்த சரித்திர ஆசிரியரும் இயேசு இறந்தார் என்பதில் ஐயம் கொள்வதில்லை. இருந்தாலும் இயேசுவின் சரீரம் அரிமத்தியா யோசேப்பின் கல்லறையை விட்டு காணாமல் போனதை குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அரிமத்தியா யோசேப்பு யூதர்களின் தலைமை சங்கத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் என்று சுவிசேஷ நூல்கள் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் இஸ்ரேலில் தலைமை சங்க உறுப்பினர்கள் அனைவராலும் அறியப்பட்டு இருந்தனர். அரிமத்தியா யோசேப்பு என்பவர் உண்மை நபராக இருந்தே ஆக வேண்டும். இல்லாவிடில் இல்லாத யோசேப்பு என்ற நபரை தலைமை சங்க உறுப்பினர் என்று கூறி கிறிஸ்தவர்கள் பொய்யுரைத்ததை யூதர்கள் அம்பலமாக்கி எளிதாக இயேசுவின் உயிர்தெழுதலை பொய் என்று நிரூபித்திருப்பர். தலைமை சங்க உறுப்பினர் ஒருவரால் கட்டப்பட்ட கல்லறை உள்ள இடம் யூதர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இயேசுவின் உடல் கல்லறையில் வைக்கப்பட்ட பின்பு சேவகர்களால் கல்லறை முத்திரை இடப்பட்டு காவல் வைக்கப்பட்டது. ஆக கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசுவின் உடலை மறைத்திருக்கவும் வாய்ப்பில்லை. எனவே தலைமை சங்க உறுப்பினரான அரிமத்தியா யோசேப்பின் கல்லறையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டது உண்மை சம்பவம்.
மூன்றாம் நாளிலே இயேசு உயிர்த்தெழுந்தார் என்று ஆதிகால கிறிஸ்தவர்கள் செய்திகளை பரப்பலாயினர். அதற்கு யூதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
"இயேசுவின் சீடர்கள் கல்லறையில் இருந்த அவரது உடலை திருடி விட்டு இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று பொய்யுரைக்கின்றனர்" என்பது யூதர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு எதிராக இடும் குற்றச்சாட்டு. யூதர்களின் குற்றச்சாட்டில் இருந்தே கல்லறை காலியாக இருந்தது உண்மை என்பது தெளிவாகிறது.
மாரிசன் என்ற ஆங்கில எழுத்தாளர் , இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்க புத்தகம் ஒன்றை எழுத தொடங்கினார். அப்பொழுது அவருக்கு பெரிதும் இடித்த கேள்வி - "ஏன் இயேசுவை எதிர்க்கும் யூதர்களும் கல்லறை காலியாக இருந்த செய்தியை ஏற்றுக் கொண்டனர்?" என்பதே!
இதுவரை உயிர்த்தெழுதலுக்கு கிடைத்த மறுப்பு கையேடுகள் எல்லாம் இயேசுவின் உடலை சீடர்கள் திருடிவிட்டனர் என்பதே. அந்த கூற்றிலே கல்லறை காலியாக இருந்தது உண்மை என்பது உறுதியாகிறது.
அடுத்ததாக, சீடர்கள் உடலை திருடினர் என்பதை ஏற்க முடியாது. ரோம சேவகர்கள் காவலில் ஈடுப்பட்டிருக்கும் போது உறங்கினாலோ வேறிடம் நகர்ந்தாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். காவலில் கவனம் சிதறும் சேவகர்களை ஆடைகளை அகற்றி தீயில் தள்ளி உயிரோடு எரித்து கொலை செய்ய வேண்டும் அல்லது சிலுவையில் தலைகீழாக அறைய வேண்டும் என்பது அக்கால ரோம அரசின் சட்டம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விளங்கிய அத்தகைய ரோம சட்டங்கள் எழுதப்பட்ட பழங்கால ஓலைகள் இன்றும் நம்மிடம் உள்ளன, ரோம சேவகர்களை மீறி 2 டன் இடையுள்ள ஒரு கல்லை நகர்த்தி உடலை சீடர்கள் திருடினர் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது.
மேலும் அனைத்து சுவிசேஷ நூல்களும் உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் மகதலேனா மரியாள் என்ற பெண் கண்டதாகவே கூறுகின்றன. இந்த கூற்றில் சுவிசேஷ நூல்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. மாரிசன் போன்ற மறுப்பாளர்கள் வியக்கும் இன்னொரு இடம் - "ஏன் அனைத்து சுவிசேஷ ஆசிரியர்களும் ஒரு பெண்ணை உயிர்த்தெழுதலிற்கு முதல் சாட்சியாக முன்வைக்கின்றனர்?" என்பதே. ஏன் எனில் அச்சமூகத்தில் அக்காலத்தில் பெண்கள் சமமாக கருதப்படவில்லை. பெண்களின் சாட்சியங்கள் எல்லாம் முக்கியமானதாக கருதப்படவில்லை. பொய்யாக எழுதப்பட்ட கதைகள் என்றால் ஆசிரியர்கள் ஒரு ஆணை முதல் சாட்சியமாக எழுதியிருப்பர். இருப்பினும் ஒரு பெண்ணை முதல் சாட்சியாக சுவிசேஷ நூல்கள் எடுத்துரைக்க என்ன காரணம்? என்ற கேள்வி மாரிசனிற்கு இடித்தது.
அது மட்டும் அன்றி, சுவிசேஷ நூல்கள் உயிர்த்தெழுந்த இயேசுவை பலர் பலமுறை கண்டதாக, அவரை தொட்டதாக, அவருடன் உணவு உண்டதாக, நாற்பது நாட்கள் அவரோடு சீடர்கள் செலவிட்டதாக கூறுகின்றன. கி.பி 54-இல் அப்போஸ்தலர் பவுல் கிட்டத்தட்ட 500 பேர் உயிர்தெழுந்த இயேசுவைக் கண்ணால் கண்டதாக எழுதுகிறார். பவுல் ஆதிகால கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் மதிக்கப்பட்டவர், பலரை கிறிஸ்தவத்திற்கு அழைத்து வந்தவர். துணிகரமாக ஒரு பொய்யை பவுல் கூறினால் அவருக்கு உள்ள மதிப்பு மரியாதை நிச்சயமாக பறிபோகும். இருப்பினும் பவுல் கீழுள்ள படி எழுதுகிறார்.
"அதன் பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்"- 1 கொரிந்தியர் 15:6
பேதுரு, தானும் மற்ற சீடர்களும் இயேசு உயிரோடு இருப்பதை மனப்பூர்வமாக ஏற்பதாக பொது மக்களிடம் கூறுகிறார்.
"யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகள் எல்லாவற்றிலும் நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலை செய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்" - அப்போஸ்தலர் 10:39,40
மாரிசனின் புத்தகத்திற்கு விளங்கிய இன்னொரு பெரிய தடை சீடர்களின் நடத்தை. மாரிசன் மட்டும் அல்ல அனைத்து சரித்திர ஆசிரியர்களுக்கும் மனோத்தத்துவ மருத்துவர்களுக்கும் மறுப்பாளர்களுக்கும் உள்ள விளக்க முடியாத ஒரு இடம் இயேசுவின் சீஷர்களின் நடவடிக்கைகளே. உயிருக்கு பயந்து சிலுவைப்பாடுகளின் போது இயேசுவை விட்டு ஓடிய 11 கோழைகள் என்ன காரணத்தினால் தைரியமாக வெளியே வந்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று போதித்தனர்? ஒரு சீடரை தவிர்த்து மீதமுள்ள 10 பேரும் கிறிஸ்தவத்தை போதித்த காரணத்தினால் கொடூரமாக கொலையுண்டனர். ஒரு பொய்க்காக இத்தனை துணிகரமாக இறக்கும் அளவிற்கு 10 பேருக்கு எப்படி மனம் வரும்?
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நினைவு இருக்கிறதா? உலக வர்த்தக மையம் அல்கொய்தா தற்கொலை படை தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள். அந்த தீவிரவாதிகளுக்கு தங்கள் உயிரை விட தாக்குதலே முக்கியமாக தெரிந்ததன் காரணம் என்ன? அவர்களது நம்பிக்கை. தங்களது இறப்பிற்கு பின் இறைவன் தங்களை ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கை. நிச்சயமாக நம்பும் ஒரு எண்ணமே அத்தகைய செயலிற்கு அவர்களை தூண்டியது.
சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்து ஒளித்துவிட்டு "அவர் உயிர்த்தெழுந்தார் நாங்கள் அவரை கண்டோம், தொட்டோம், அவரோடு உண்டோம், 40 நாட்கள் அவரோடு தங்கியிருந்தோம்" என்று பொய் கூறினர் என்றே எடுத்துக் கொள்வோம். இயேசு உயிர்தெலவில்லை என்பதை மறைத்து யாரை வேண்டுமானாலும் அவர்களால் ஏமாற்ற இயலும், ஆனால் தங்கள் சொந்த மனதை ஏமாற்ற முடியாது. அத்தகைய நிலையில் ஒரு பொய்க்காக எப்படி உயிரை விடும் அளவிற்கு அவர்களுக்கு மனம் வரும்?
மேலும் அவர்கள் "இயேசு உயிர்தெழுந்தார்" என்று கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக போதித்து வந்தனர். எந்த நிலையிலும் எத்தகைய கொடுமைகளை அனுபவித்த நேரங்களிலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சமயத்திலும் கூட அவர்கள் தங்கள் கூற்றில் இருந்து பின் வாங்கவே இல்லை. 10 மனிதர்களால் மனம் அறிந்த பொய்யை 40 ஆண்டுகளாக ஒரு முறை கூட பின் வாங்காமல் எப்படி கூற முடியும்? பலமுறை கொடுமைகளை அனுபவித்து உயிர் பறிபோகும் நிலை வந்த போதும் மனம் அறிந்த ஒரு பொய்யை காக்க எப்படி 10 பேருக்கு மனம் வரும்?
இந்த கேள்விக்கு பதில் கூற முடியாமல் இயேசு உயிர்தெலவில்லை என்று நிரூபிக்க எழுத துவங்கிய தன் நூலை இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற முடிவுரையோடு முடித்துவிட்டார் ஆங்கில எழுத்தாளர் மாரிசன்!
3) சீடர்களுக்கு பிரம்மை பிடித்திருக்கிறது
மனோத்தத்துவ விதிகள் படி ஏதேனும் ஒரு சம்பவத்தால் ஒருவரது மனம் பாதிக்கப்பட்டு ஏங்கி தவித்தால் அவர் ஏங்கும் காரியம் உண்மையில் நிகழ்வது போலவும் நிகழ்ந்து விட்டது போலவும் பிரம்மைகள் ஏற்படும். இதனை 'ஹாலுசிநேசன்' என்பர். ஏசுநாதரின் மரணத்தால் அவருக்காக அழுது புலம்பிய சீடர்களின் மனம் அதிர்ச்சிக்குள்ளாகி அதன் காரணமாக அவர்களுக்கு இயேசு உயிர்த்தெழுந்தது போல பிரம்மைகள் ஏற்பட்டு இருக்கலாம் என்பது சிலர் கூறும் மறுப்புரை. இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், ஒரே பிரம்மை ஒரே சமயத்தில் 11 பேருக்கு நேரிட வாய்ப்பில்லை என்பதும் மனோதத்துவ விதி!
4) உயிர்த்தெழுதல் காலப்போக்கில் எழுந்த கட்டுக்கதை
சிலர், "முதலில் யாரேனும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று பொய் கூற அந்த செய்தி காலப்போக்கில் பரவி உண்மை சம்பவமாக மக்கள் மனதில் பதிந்திருக்கலாம்" என்கின்றனர்.
இது சிந்திக்க தூண்டுகிறது. ஆனால் சில முரணப்பாடுகள் உள்ளன.
1) இயேசுநாதருடன் வாழ்ந்த சீடர்களும் அவரது உறவினர்களும் உயிரோடு இருக்கும் போது அத்தகைய கட்டுக்கதை எழ வாய்ப்பில்லை. ஏன் எனில் அத்தகைய கட்டுகதைகளுக்கு மறுப்பு தெரிவிக்க அவர்கள் அக்காலத்தில் உயிரோடு தான் இருந்தனர்.
2) ஏசுநாதர் உயிர்த்தெழுந்தார் என்று கூறி அடி உதை வாங்கி உயிர் இழந்தவர்களுள் ஏசுநாதரின் சீடர்களும் உறவினர்களும் உள்ளனர்
3) உயிர்தெழுதல் செய்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவி இஸ்ரேலில் இருந்து இத்தாலி வரை எட்டியது. குறுகிய காலத்திற்குள் பல நூல்கள் உயிர்தெலுதல் குறித்து எழுதப்பட்டன.
4) எல்லாவற்றிலும் முக்கியமாக இந்த கணிப்பு காலியான கல்லறை குறித்தும் சீடர்களின் நடத்தை குறித்தும் விளக்கமளிக்க தவறுகிறது.
5) உயிர்த்தெழுதல் செய்திதான் குறுகிய காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தையே கவிழ்த்து போட்டது. எந்த நாட்டினர் இயேசுவை கொலை செய்தனரோ அவர்களே இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூவினர். கிறிஸ்தவமே எங்கள் நாட்டின் மார்க்கம் என்று அதிகாரப் பூர்வமாக முதன்முதலாக அறிவித்தனர்.
5) உயிர்த்தெழுதல் உண்மையாக நடந்த சம்பவம்
மாரிசன் தன் நூலில் எழுதினார்,
"20 ஆண்டுகளுக்குள் கலிலேயர்களின் போதனை யூத மார்கத்தையே சிதைத்து விட்டது, 50 ஆண்டுகளுக்குள் ரோம சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டது! இவைகள் எல்லாம் உலக வரலாற்றின் புரியாத புதிர்கள்! எதனால் வெற்றி பெற்றனர்?"
இதற்கு பவுல் தரும் விடை இதுவே,
"கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" - 1 கொரிந்தியர் 15:14
சீஷர்கள் தங்கள் உயிரை நீத்து நமக்கு ஊட்டிய உண்மையே உயிர்த்தெழுதல்!
http://ivaryaar.blogspot.in/2013/02/blog-post_16.html