Saturday, 14 December 2013

கவர் ஸ்டோரி – II : வீழ்ச்சி!
மாலன்

தர்மாவேசத்தோடு எழுந்த ஓர் பத்திரிகையாளன் வியாபாரியாகி வீழ்ந்த கதை

அவன் மெல்ல இருளில் கிடந்த ரகசியங்களை அம்பலப்படுத்தத் துவங்கினான். உண்மை நிர்வாணமாய் உரித்துக் காட்டப்படும்வரை, உறுதியான எல்லாம் தலைகீழாகப் புரட்டப்படும்வரை அவன் மெல்ல மெல்ல இருளில் கிடந்த ரகசியங்களை அம்பலப்படுத்தத் துவங்கினான். விரைவிலேயே அவன் காதலின், வாழ்வின் உடைசல்கள் மட்டும் அவனைச் சூழ்ந்திருக்க... அவன் தனிமைப்பட்டுப் போனான். எழுதப்படாத அவனது பெரும் படைப்பும், எதிர்கால இருளும் அவனை விழுங்கக் காத்திருக்க... தனிமைப்பட்டுப் போனான்.

சையின் ரசவாதம் (The Alchemy of Desire) என்ற தருண் தேஜ்பாலின் முதல் நாவலின் கதைச்சுருக்க வரிகள் இவை. இவற்றை இன்று வாசிக்கும்போது இதழோரம் ஓர் புன்னகை கசிவதைத் தவிர்க்கத்தான் முடியவில்லை.

பல ஆங்கிலப் பத்திரிகையாளர்களைப் போல, தன் இளம் வயதில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தன் இதழியல் வாழ்வைத் துவக்கிய தருண் தேஜ்பால் ஒரு ராணுவ அதிகாரியின் மகன். பல ஊர்களில் படித்து சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். இந்தியன் எக்ஸ்பிரசில் பணியைத் துவக்கினாலும் தனது 21-ஆவது வயதில், ‘இந்தியா டுடே’ பத்திரிகைக்கு வந்துவிட்டார். அங்கு முதலில் அவருக்கு புத்தக விமர்சனம் எழுதும் பணிதான் கொடுக்கப்பட்டது. அவருக்கு புலானாய்வு இதழியலில் இருந்த ஆர்வம் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. காரணம், அடிப்படையில் ஓர் இலக்கிய எழுத்தாளர், தீவிர வாசகர்.

‘இந்தியா டுடே’வில் பத்தாண்டுகள் பணி புரிந்த பின் ஃபைனான்சியல் எகஸ்பிரசில் சேர்ந்தார். ‘இந்தியா டுடே’யின் போட்டி இதழ் எனக் கருதப்படும் ‘அவுட்லுக்’ இதழ் துவக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றினார்.

அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, ‘இந்தியா இன்க்’ (India Ink) என்ற பதிப்பகத்தைத் துவக்கினார். அருந்ததி ரா, கபில் சிபல், மஞ்சு கபூர் போன்ற பிரபங்களின் நூல்களை வெளியிட்ட நிறுவனம் இப்போது கை மாறிவிட்டது.

டாட் காம் (இணையதளம்) என்பது பணம் கொட்டும் தொழிலாக இருந்த இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 2000-த்தில், ‘வென்சர் காபிடல்’ உதவிகள் கிடைத்து வந்த காலகட்டத்தில் தனது மனைவி மின்டி, மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து தெஹல்கா இணையதளத்தைத் துவக்கினார்.

இந்த இரு நண்பர்களில் ஒருவர் அநிருத்த பகல். இவரும் ‘இந்தியா டுடே’வில் பணியாற்றியவர். அங்கே பல புலனாய்வுக் கட்டுரைகள் எழுதியவர். ராஜீவ் கொலையில் சிவராசனுக்கு இருந்த தொடர்பை அம்பலப்படுத்தியவர் இவர்தான். இந்தியில் தெஹல்கா என்ற பெயரைச் சூட்டியவரும் இவர்தான். தெஹல்கா என்றால் பரபரப்பு என்று அர்த்தம்.

அநிருத் ‘இந்தியா டுடே’வைப் போலவே தெஹல்காவிலும் நிறைய புலனாய்வுக் கட்டுரைகள் எழுதினார். இவர் பின்னர் தெஹல்காவிலிருந்து விலகி தற்போது கோப்ராபோஸ்ட்.காம் என்ற புலனாய்வு இணையதளத்தை நடத்தி வருகிறார். இது அண்மையில் பல அதிர்ச்சி தரும் விஷயங்களை (குஜராத் அரசு அதிகாரிகள் ஓர் இளம்பெண்ணை பின் தொடர்ந்த விவகாரம், வங்கிகள் ஹவாலா பிசினஸில் ஈடுபட்டுள்ள விவகாரம் போன்றவை) வெளியிட்டு வருகிறது.

கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் ஃபிக்சிங்கை அம்பலப்படுத்தியதுதான் தெஹல்கா இணையதளம் வெளியிட்ட முதல் புலனாய்வுக் கட்டுரை. கிரிக்கெட்டைக் கும்பிடும் தேசம் திகைத்தது. தெஹல்காவின் பக்கம் கவனம் திரும்பியது. இந்த கிரிக்கெட் ஊழல் பற்றி சிபிஐ, விசாரணை மேற்கொண்டது. அசாருதீன், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா ஆகியோர் வாழ்நாள் முழுதும் விளையாடத் தடை விதிக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரை ராணுவ அதிகாரிகளிடையே இருந்துவரும் லஞ்ச ஊழலை வெளிப்படுத்தும் ஆபரேஷன் வெஸ்ட் எண்ட். பாதுகாப்பு அமைச்சர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த பங்காரு லக்ஷ்மண், ஜார்ஜ் பெர்னாண்டஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயா ஜெட்லி, பல அதிகாரிகள் பதவியிலிருந்து உருண்டனர்.

ஆபரேஷன் வெஸ்ட் எண்ட் தெஹல்காவிற்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தது. நிறைய பிரச்சினைகளையும் கொண்டுவந்தது. வென்சர் காபிடல் முறையில் முதலீடு செய்தவர்கள் அதிகார வர்க்கத்திடமிருந்து நிறைய நெருக்கடிகளைச் சந்தித்ததையடுத்து விலகிக் கொண்டார்கள். பத்திரிகையில் பணியாற்றியவர்கள் விலகினார்கள். தெஹல்கா.காம் மூடப்பட்டது.

எழுத்தாளர்கள் (அருந்ததி ராய், சசி தரூர் போன்றோர்), வக்கீல்கள், (கபில் சிபல், ராம்ஜெத்மலானி போன்றோர்), சினிமா நட்சத்திரங்கள் (அமீர்கான், நந்திதா தாஸ் போன்றவர்கள்), வணிகர்கள்,  சமூகச் செயல்வீரர்கள் என 200 பேர் தலைக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க... 2004-இல் மீண்டும் தெஹல்காவை வார இதழாகத் துவக்கினார் தேஜ்பால். ‘மக்கள் இதழ்’ என்ற முழக்கத்துடன் அது வலம் வரத் துவங்கியது. குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரம் பற்றிய ஒரு புலனாய்வுக் கட்டுரையின் மூலம் கவனத்தையும் சர்குலேஷனையும் பெற்றது. ஆனால் பொருளாதார நிலை சீராகவில்லை.

ர்மாவேசத்தோடு இதழியலுக்குள் அடியெடுத்து வைத்த ஒரு பத்திரிகையாளன் வியாபாரியாக மாறுகிற துயரம் இங்குதான் துவங்கியது. பொருளாதார நிலையை சமாளிக்க தேஜ்பால் முதலீடுகளைத் தேட ஆரம்பித்தார். திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரான கே.டி. சிங்கின் நிறுவனமான ராயல் பில்டிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் தனது துணை நிறுவனம் மூலம் 65 சதவீதப் பங்குகளை வாங்கிக் கொண்டது. அக்னி மீடியா என்ற தேஜ்பாலின் நிறுவனம் ஆனந்த் மீடியா என்ற புதிய பெயரைச் சூடிக் கொண்டது. அக்னி, ஆனந்த் ஆனதை இப்போது பார்க்கும் போது இந்த மாற்றம் ஏதோ ஒரு குறியீடு போல (Symbolix) தோன்றுகிறது. தேஜ்பாலிடம்  19 சதவீதப் பங்குகளும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் 10 சதவீதப் பங்குகளும் மற்ற வேறு சிலரிடம் மீதிப் பங்குகளும் உள்ளன.

 கே.டி.சிங்கின் நிறுவனம் ஒன்று மோசடிக் குற்றச்சாட்டுகளின் பேரில் 2012-இல் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டது, அந்த நிறுவனம் தெஹல்காவிற்கு 19 கோடி ரூபாய் பிணை இல்லாத கடனாகக் கொடுத்திருக்கிறது  என்பது தெஹல்காவின் மீது படிந்துள்ள நிழல். முதலீடுகள் வந்தன.

ஆனால் நஷ்டம் தொடர்கிறது. 2011-ஆம் ஆண்டு  16 கோடி ரூபாயும், 2012-ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய்க்கு மேலும் தெஹல்காவை வெளியிடும் ஆனந்த் மீடியா நஷ்டத்தை சந்தித்துள்ளது. அது கடந்த ஆண்டுகளில் மொத்தம் 66 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

நிறுவனம் நஷ்டத்தில் இருந்து வருகிறது என்றாலும் தருணின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பங்குகளை நம்ப முடியாத விலைக்கு விற்றுப் பணம் பார்த்துவிட்டார்கள் என தருணை  விமர்சிப்பவர்கள் சொல்கிறார்கள். தருணின் மனைவி அவர் வசம் இருந்த 2000 பங்குகளை பங்கு ஒன்று 13,189 ரூபாய் என்ற விலைக்கு விற்றதன் மூலம் 2.64 கோடி பெற்றார் எனவும், தருணின் தந்தை தன் வசம் இருந்த 1,000 பங்குகளை விற்று 1.32 கோடியும், அவரது தாய் 1.32 கோடியும், சகோதரர் 2 கோடியும், சகோதரி 57 லட்சமும் பெற்றார்கள் என அவர்கள் சொல்கிறார்கள். நிறுவனம் நஷ்டத்தில் நடக்கும்போது, அதன் நிகர சோத்து மதிப்பு மைனஸில் இருக்கும்போது எப்படி இவ்வளவு அதிகத் தொகைக்கு அவர்களால் விற்க முடிந்தது என்பது அவர்கள் எழுப்பும் கேள்வி.

வரது குடும்பத்தினர் பங்குகளை விற்றார்களே தவிர, தருண் தேஜ்பால் தனது பங்குகளை விற்கவில்லை. ஆனால் அவர் வேறுவிதங்களில் பணம் சம்பாதித்துவிட்டார் என்பது அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

கடந்த மூன்றாண்டுகளாக திங்க் பெஸ்ட் (Think Fest) என்ற சிந்தனைத் திருவிழா ஒன்றை தெஹல்கா நடத்தி வருகிறது. ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மிகப் பிரபலமானவர்களை அழைத்து மூன்று நாட்கள் இந்தத் ‘திருவிழா’ நடக்கும். பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள இந்தாண்டு திருவிழாவில் பங்கேற்றவர்கள் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் ராபர்ட் டி நிரோ, எழுத்தாளர் வி.எஸ்.நைபால், நடிகர் அமிதாப் பச்சன், கவிஞர் ஜாவித் அக்தர், அமைச்சர் பாரூக் அப்துல்லா, தொழிலதிபர் நந்தன் நீல்கேணி, முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய், சமூக சேவகர் மேத்தா பட்கர், தாலிபானின் நிறுவனர்களில் ஒருவரான அப்துல் சலாம் சயீஃப் போன்றோர்.

இவ்வளவு பிரபலமானவர்களை கோவா போன்ற இடத்திற்கு அழைத்து மூன்று நாட்கள் ஒரு நிகழ்ச்சியை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்துவது என்றால் அதற்கு பெரும் செலவாகுமே, தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் ஒரு நிறுவனத்திற்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்வி ஊடக வட்டாரங்களில் எழுந்தபோது ஓர் உண்மை வெளியாயிற்று.

இந்தத் திருவிழா தெஹல்காவின் பெயரால் நடத்தப்பட்டாலும் அதை ஏற்பாடு செய்வது தெஹல்கா அல்ல. அதை நடத்துவது திங்க் ஒர்க்ஸ் என்ற ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் 80 சதவீதப் பங்குகள் தருண் தேஜ்பால் வசம் உள்ளன. மீதிப் பங்குகள் தலா பத்து சதவீதம் அவரது சகோதரி வசமும், அண்மையில் தெஹல்காவின் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிய ஷோமா சௌத்ரி வசமும் உள்ளன.  கடந்த ஆண்டு 56,391 ரூபாய் நஷ்டம் சம்பாதித்த இந்த நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று என்று பார்த்தால் ஏர்டெல், எஸ்ஸார், டிஎல்எஃப், கோகோ கோலா, யூனிடெக், வேவ், டொயாட்டோ, பிஎச்இஎல், கோவா டூரிசம்  போன்ற  34 கார்ப்பரேட் மற்றும் அரசு நிறுவனங்கள் இதற்கு நன்கொடை அளித்துள்ளன. இவற்றின் மூலம் வந்த பணம் 12.4 கோடி. இதில் பார்த்த லாபம் 2 கோடி.

சுருக்கமாகச் சொன்னால் தருண் தேஜ்பாலின் முதலீடு குறைவாக உள்ள (தெஹல்கா) நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறது. பெருமளவு அவரது முதலீட்டைக் கொண்ட (திங்க் ஒர்க்ஸ்) நிறுவனம், கார்ப்பரேட்களின் ஆதரவுடன் லாபம் சம்பாதிக்கிறது!

சட்டப்படி இது தவறு இல்லை. ஆனால் தர்ம நியாயங்களின்படி இனி தெஹல்கா எப்படி இந்த நிறுவனங்கள் பற்றி எழுதும்?

திங்க் ஒர்க்ஸில் லாபத்தை ருசி பார்த்த தேஜ்பால் ப்ருஃபோர்க் (prufrock) என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அது தில்லியில் ஒரு ‘பாஷ்’ ஆன பகுதியில் அறிவுஜீவிகள், கலைஞர்களுக்கான ஒரு கிளப் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. அதில் அழைப்பின் பேரிலேதான் உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்த நிறுவனத்தில் சடாஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் 2 கோடி ரூபாயை 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலீடு செய்துள்ளது. இந்த சடா ஹோல்டிங்ஸ் குர்தீப் சிங் சடா என்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாராய வியாபாரிக்குச் சொந்தமானது. வட இந்தியாவில்  மூன்று மாநிலங்களில் ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை செய்பவர் அவர். மதுக்கடைகள் முன் தின்பண்டங்கள் விற்பவரின் மகனாக வாழ்க்கையைத் துவக்கிய அவர் பின்னாளில் மது விற்பனை, சர்க்கரை, ரியல் எஸ்டேட், வேவ் என்ற பெயரில் பல சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை நடத்தும் தொழிலதிபராக வளர்ந்தார். அவரது சினிமா தியேட்டர்கள் வரி ஏப்புச் செய்ததாக சோதனைகளையும் எதிர்கொண்டன. அவர் கடந்த நவம்பர் மாதம் சத்தர்பூர் என்ற ஊரில் அவரது பண்ணையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அவரது மேனேஜரும், டிரைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

இப்படி ஒரு நிழலான மனிதரிடமிருந்து கிளப் நடத்துவதற்கான திட்டத்திற்கு தேஜ்பால் முதலீடு பெற்றிருப்பதும் அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

கிரேக்க துயர நாடகங்களைப் போல விரியும் இந்த வீழ்ச்சி ஒரு தனிமனிதனுடையது மட்டும்தானா? ஒரு சமூகத்தின் வீழ்ச்சியும்கூட அல்லவா? அநீதிகளுக்கு எதிராக எழுகிற வாள்கள் எல்லாம் பணத்தின் முன்னால் மண்டியிடுகிற துயரம் நம் எல்லோருக்குமானதல்லவா?

No comments:

Post a Comment