வெற்றி வெளியே இல்லை – 7
ரமணன்
அழைத்தது இந்திய அரசு
கெல்லாக்ஸ் பல்கலைக்கழகத்தில் தொழிற்துறைப் பேராசிரியராக இருந்த நான் ஆழ்ந்த யோசனைகளுக்குபின் நிதி மற்றும் கணக்கியியல் துறையில் ஓர் ஆசிரியராக ஆவது என்று முடிவு செய்தேன். அது எளிதல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சவாலாக எடுத்து முடிக்க விரும்பினேன். அமெரிக்காவில் நிதி மற்றும் கணக்கியலில் ஆசிரியராக வேண்டுமானால், CPA என்கிற தகுதி வேண்டும். இது நமது CA விற்கு நிகரானது. அமெரிக்கக் கணக்காயர்கள் சொஸைட்டி நடத்தும் தேர்வு. தேர்ச்சி விகிதம் குறைவு. பாடங்களும் வணிகவியல் பட்டதாரிகளுக்கே கடினமானது. ஆனாலும் நான் அதைத்தான் படிக்க விரும்பினேன். 12 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். ஒரு கணக்கு நிறுவனத்தில் நேரடிப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிக்க, கெல்லாக்ஸ் பல்கலைக்கழகத்தில் அனுமதி கேட்டேன். அந்த டீன் எனக்கு அனுமதியும், ஓராண்டு லீவும் கொடுத்தார்.
இந்த CPA எழுத குறைந்தபட்சத் தகுதி இளநிலை பட்டப்படிப்பில் நிதி, கணக்கியல் படித்திருக்க வேண்டும். CPAதேர்வு முடிவுக்குள்ளாக தகுதித் தேர்வை முடிக்க வேண்டும் . இதனால், நான் ஒரு கல்லூரியில் மாணவனாகி இளநிலை நிதி நிர்வாகம் படிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. கெல்லாக்ஸ் கல்லூரியிலேயே படிக்க வாய்ப்பும் தந்தார்கள். நான்தான் அதை ஏற்கவில்லை. அதுவரை வாழ்நாளில் நான் எழுதிய அத்தனை தேர்விலும் ‘அ’ அல்லது ‘அ+’ கிரேடுகள்தான் (90-100 மதிப்பெண்கள்) வாங்கியிருந்தேன். நான் பணியாற்றும் கல்லூரியில் ஒரு துணைப் பேராசிரியர் எனது அந்த நிலையை மாற்றிவிடக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதால், நான் வேறு கல்லூரியில் படிக்க விரும்பி அதில் சேர்ந்தேன்.
பேராசிரியராக இருந்த நான், மீண்டும் மாணவ வாழ்க்கைக்குத் திரும்பினேன். நேரடிப் பயிற்சிக்காக ஆர்தர் ஹாண்டர்சன் என்கிற நிறுவனத்தில் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன். பிஎச்.டி. பெற்ற பேராசிரியராக இருந்தாலும் அங்கு ஒரு பயிற்சியாளனாகத்தான் மதிக்கப்பட்டேன். பகலில் வேலை, மாலையில் கல்லூரி, இரவில் CPAதேர்வுகளுக்கான படிப்பு எனக் கடுமையான உழைப்பு, படிப்பு படிப்பு அதைத்தவிர எதுவுமில்லை. ஒரே ஆண்டில் அத்தனை 12 பேப்பர்களையும் எழுதி முடித்துவிட விரும்பினேன். பலர், ‘அது கடினம், இரண்டாண்டுகளாக திட்டமிடுங்கள்’ என்றனர். நான் ஒரே ஆண்டில் முடிக்க முடியும் என நம்பினேன்.
அமெரிக்காவில் நான் கற்ற முதல் பாடம், இங்கு குறைவான நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்க முடியும். அது Money Value of Time என்பதின் பொருளைச் சொல்லிக் கொடுத்தது. நேரத்தின் மதிப்பை பணத்தின் அளவுகோலில் மதிப்பிடக் கூடிய வாய்ப்புகளை நான் தவற விட்டதேயில்லை. திட்டமிட்டபடி ஒரே ஆண்டில் அத்தனை பேப்பர்களிலும் நல்ல மார்க்குகளுடன் தேர்ந்து CPA ஆனேன். இளநிலைத் தேர்வு முடிவுகள், CPA உரிமம் எல்லாம் வந்த பின் கெல்லாக்ஸ் பிசினஸ் ஸ்கூலின் அக்கவுண்டிங் துறையில் பேராசிரியரானேன். விரும்பியதை சவாலாக்கிக்கொண்டு சாதித்த சந்தோஷம். துறையில் புதிய வகுப்புகளைப் புகுத்தத் திட்டமிட்டேன். அது பெரிய வெற்றியாகியதால், ஒரே ஆண்டில் அந்தத் துறையின் தலைவராக்கப் பட்டேன்.
உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக கனவு கண்டு,தந்தை சொன்னதற்காக கணிதத்துடன் புள்ளியியல் படித்து, கிடைத்த வாய்ப்பில் பொறியியல் படித்து, அதில் தொழிற்துறைப் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றுப் பேராசிரியராகி, கணக்கியல் துறையில் தேர்ந்து உலகின் சிறந்த நிர்வாகயியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரானேன்" என்று தன் வெற்றிப் பயணத்தின் மைல்கற்களை விவரித்தார் பேராசிரியர் பாலா.
இந்தக் கட்டத்தில் இவர் பிஸினஸ் கணக்கு வழிமுறைகள் பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் யார் இந்த பாலா என மேனெஜ்மெண்ட் உலகைப் பார்க்கச் செய்தது. தொடர்ந்து கெல்லாக்ஸ் கல்லூரியில் இவரது புதிய வகுப்புகள், புத்தகங்கள் அமெரிக்க கார்ப்பரேட் வட்டாரத்தில் பேசப்பட்டன. இந்திய நிர்வாகவியல் கல்லூரிகளும் இவரைக் கவனித்தன.
பெங்களூருவில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) துவக்கத் தீர்மானிக்கப்பட்டபோது அதன் தலைவர் ராமசாமி, சிகாகோவிற்கு வந்து இவரை அதில் சேர அழைத்தார். ஆனால், பாலா ஏற்கவில்லை. காரணம், இந்திய ஐஐஎம்மில் பணியில் சேர்ந்து ஐஐஎம்களுக்கு உதவுவதைவிட அமெரிக்காவில் பணியிலிருந்தால், அவற்றுக்கு அதிகம் உதவி செய்யலாம் என்பதே. மேலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அளவுக்கு அங்கு சுதந்திரம் கிடையாது என்பதும் ஒரு காரணம். ஆனால், பெங்களூரு ஐஐஎம்மின் முதல் 6 பேராசிரியர்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து அடையாளம் கண்டு, நேர்முகத்தை தன் வீட்டிலேயே நடத்தித் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார். இன்றும் இதுபோன்ற உதவிகளை செய்துகொண்டிருக்கிறார். இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் அவரது ஆலோசகரின் வேண்டுகோளை ஏற்று, ஐஐஎம்மின் பணிகளை ஆராய்ந்து அறிக்கை கொடுத்திருக்கிறார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியபோது பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனத் தலைவர்களுக்கான வகுப்புகளுக்கு வந்த இந்திய தொழிற்துறைத் தலைவர்களான ராகுல் பஜாஜ், முகேஷ் அம்பானி, கோத்ரேஜ் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. பின்னர், அவர்களில் சிலர் நல்ல நண்பர்களானார்கள்.
உலகின் முக்கிய பிஸினஸ் ஸ்கூல்களில் வகுப்பு எடுக்க அழைக்கப்பட்டதாலும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் அரசின் ஆலோசனைக் குழுவில் இருந்ததாலும் நிறையப் பயணங்கள், புதியவர்களின் சந்திப்பு எனப் பாலாவின் வாழ்க்கை பிஸியாக இருந்த நேரத்தில் அவர் எதிர்பாராத ஓர் அழைப்பு- இந்திய அரசிடமிருந்து வந்தது.
1990-களின் துவக்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட புதிதில் டாக்டர். மன்மோகன் சிங் நமது IAS அதிகாரிகளின் பார்வைகள் மாற வேண்டும், நவீன அமெரிக்க நிர்வாக முறைகளை அறிந்திருக்க வேண்டும், அதற்கு அவர்களை இந்தியாவிலேயே தயார் செய்யவேண்டும் என விரும்பினார்.
அதற்கு உலகின் மிகச் சிறந்த மேலாண்மைக் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்களை அழைத்து, அவர்கள் உதவியுடன் இதைச் செய்ய விரும்பினார். இதற்காக ஓர் அதிகாரிகள் குழு அமெரிக்கா வந்திருந்தது. கெல்லாக்ஸ் முடிவு செய்யப்பட்டு, அதனால், எனக்கு வாய்ப்பும் கிடைத்தது. நம் நாட்டுக்கு உதவ, அதுவும் பிரதமர் மட்டத்திலிருந்து எழுப்பப்பட்டிருக்கும் யோசனை என்பதால், மிகுந்த சந்தோஷமாக ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால், இத்திட்டத்திற்குப் பெருமளவில் டாலர் நிதி வேண்டும். நம் தேசத்தில் அப்போது இதற்கெல்லாம் செலவழிக்க டாலர்கள் கிடையாது. நமது அதிகாரிகள் சூப்பர் புத்திசாலிகள். இம்மாதிரிப் பயிற்சிகளுக்கு ஐ.நா. பணம் ஒதுக்குகிறது. அதைப்பெற பெரிய பல்கலைக்கழகங்கள் அரசுடன் இணைய வேண்டும். கெல்லாக்ஸ் என்பதால், உடனே நிதி வசதி கிடைத்தது.
தில்லியில் மத்திய அரசின் ஆதரவில் MDI என்று ஒரு பயிற்சி நிறுவனம் இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக NMP (NATIONAL MANAGEMENT PROGRAMME) நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு, அதை வடிவமைக்கும் பொறுப்பை நான் ஏற்றேன். IAS அதிகாரிகள் இந்தியாவின் தேர்ந்தெடுக்கபட்ட அதிபுத்திசாலிகள். அவர்களுக்கு பாடத்திட்டம் அதுவும் அரசின் நடைமுறைகளுக்கேற்ப, கெல்லாக்ஸின் தரத்தில் தயாரிப்பது ஒரு சவாலாகத்தான் இருந்தது.
20 ஆசிரியர்களுக்கு அமெரிக்காவிலும் இங்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் இரண்டு பயிற்சிகள் என் நேரடி மேற்பார்வையில் நடந்தன. அனைத்தும் அரசாங்கத்துக்கு ஒரு பைசா செலவில்லாமல் நடந்தன. இந்த வாய்ப்பின் மூலம் ஒரு MBA பாடத்திட்டத்தை முழுமையாக வடிவமைப்பதின் பரிமாணங்களை அறிந்துகொண்டேன். எல்லாப் பேராசிரியர்களுக்கும் இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
தொடர்ந்து கடின உழைப்பினால் வெவ்வேறு துறைகளில் தடம் பதித்து, சாதனைகளை செய்திருக்கும் பாலா, சென்னைக்கு அருகில் கிரேட் லேக்ஸ் என்கிற பெயரில் ஒரு பிசினஸ் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைத் துவக்கி நடத்தி வருகிறார். பல சிகரங்களைத் தொட்டு ஓய்வு பெற்றபின் 64 வயதில் இப்படி ஒரு கல்லூரியை நிறுவி நடத்தும் பொறுப்பை ஏன் மேற்கொண்டார்?
பலர் என்னிடம் கேட்ட கேள்வி இது. அமெரிக்காவில் மதிப்புமிக்க பேராசிரியர் (Distinguished professor) என்பது பெரிய கௌரவம். விரும்பும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் பேராசிரியராக இருக்கலாம். பணிச்சுமையும் அதிகம் கிடையாது. புத்தகங்கள் எழுதலாம். ஆராய்ச்சிகள் செய்யலாம். 24x7 அதாவது 24 நாட்களில் 7 மணி நேரங்கள் வகுப்புகள் எடுத்தால் போதும். அதனால், மற்ற பணிகளுக்கு நிறைய நேரம் கிடைக்கும். அத்தகைய அருமையான ஓய்வு வாழ்க்கையை விட்டுவிட்டு ஏன் இப்படிப் பொறுப்பை வரவழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனப் பலரும் கேட்டார்கள். இதற்குப் பதில், ஒரு வரியில் சொல்லிவிடமுடியாது. அதுவும் சவாலாக எழுந்த ஒரு விஷயம்தான்" என அதை விவரிக்க ஆரம்பிக்கிறார்.
No comments:
Post a Comment