Monday, 11 August 2014


கவர் ஸ்டோரி  - II : நீதிக்குத் தலைகுனிவு
என். ஹரிபிரசாத்

தமிழ்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு  கூட்டணிக் கட்சியின் நிர்பந்தம் காரணமாக,  முந்தைய காங்கிரஸ் தலைமையிலான  ஐமுகூ அரசால்,  பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக  முன்னாள்  உச்ச நீதிமன்ற  நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு  திடுக்கிடும் தகவல்  ஒன்றை வெளியிட்டுள்ளார்

2004-ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005-ஆம் ஆண்டு அக்டோபர் வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக  பதவி வகித்தவர் மார்க்கண்டேய கட்ஜு. அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது பதவிக்கால அனுபவங்கள் குறித்து எழுதி வருகிறார். அதில் அவர் எழுதியிருப்பதாவது:

2004-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. அதில் நேரடியாக மாவட்ட நீதிபதியாக  நியமிக்கப்பட்ட  அந்த நபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. அதைத் தவிர  அவருக்கு எதிராக  8 குற்றச்சாட்டுகள் பல்வேறு நீதிபதிகளால் பதிவு செய்யப்பட்டிருந்தன என்ற போதும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக நீதியரசராக இருந்த ஒருவர் தன்னுடைய ஒரு கையெழுத்தின் மூலம் எல்லாக் குற்றச்சாட்டையும் ரத்து செய்துவிட்டார். அதன் பிறகு அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.  

 கூடுதல் நீதிபதியாக இருந்த அவருக்கு  தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆதரவு பலமாக இருந்தது. மாவட்ட நீதிபதியாக இருந்தபோது அந்த அரசியல் பிரமுகருக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கியுள்ளார். இதன் காரணமாக அந்த அரசியல் பிரமுகரின் உதவியுடன் அவர் கூடுதல்  நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.  மேலும் நான் சென்னை நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியில் இருந்தபோது அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் என்னிடம் வந்தவண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில்  உச்ச நீதிமன்றத் தலைமை  நீதிபதியாக இருந்த லாகோதிக்கு அந்த நீதிபதி மீது உளவுத் துறையின் மூலம் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன் .

 ஒரு வாரம் கழித்து எனக்குத் தலைமை  நீதிபதியின் செயலாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது நீதிபதி   என்னுடன் தொலைபேசியில் பேசினார். ‘நீங்கள் கூறின அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை என்று உளவுத்துறை உறுதி செய்துள்ளது. ஊழல் சம்பந்தப்பட்ட போதுமான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன’ என்று லகோதி என்னிடம் தெரிவித்தார்.

இரண்டு வருட காலம் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்த அந்த நீதிபதியின் பதவிக்காலம் முடியும்போது, சென்னை உயர்  நீதிமன்ற நீதிபதியாக அமரும் வாய்ப்பு உளவுத்துறையின் அறிக்கையினால்  சாத்தியமில்லாமல் போகும் என்று எண்ணினேன்.

ஆனால் நடந்தது வேறு. அந்த நீதிபதிக்கு மேலும் ஓராண்டு கூடுதல் நீதிபதியாக பதவிக்காலம்  நீட்டிக்கப்பட்டது. ஆனால் அவருடன் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்த மற்ற 6 பேரும் சென்னை உயர்  நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர்.

இது எப்படி நடந்தது என்று ஆராய்ந்தபோது, உச்ச நீதிமன்றத்தில்  5 பேர் கொண்ட மூத்த நீதிபதிகள் குழு  உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான பெயரினை பரிந்துரை செய்யும். அதே போலே உயர் நீதிமன்ற  நீதிபதிகள் நியமனத்திற்கு 3 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதி கொண்ட குழுவின் மூலம் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும்.

அப்போது அந்த மூன்று பேர் குழுவில்  தலைமை நீதிபதி லகோதி, நீதிபதிகள் சபர்வால்,  ரூமா பால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். உளவுத்துறையின் அறிக்கையின்படி  2 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்தபின் அவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஆக இயலாது என்ற அறிக்கையை இந்த மூன்று பேர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தது.

அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி  நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. சில மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்த வேண்டிய சூழ்நிலை. குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிக்கு ஆதரவாக காங்கிரஸுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்திருந்த கட்சியின் அமைச்சர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனை  மூவர் குழுவில் இருந்த நீதிபதிகள் கடுமையாக எதிர்த்தார்கள்.

அந்தச் சமயத்தில் பிரதமர்  மன்மோகன் சிங் அமெரிக்காவில் ஐ.நா. சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  தில்லி விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த  அமைச்சர்கள், மன்மோகன் சிங்கிடம் ‘நீங்கள் நியூயார்க்கிலிருந்து திரும்பி வரும்போது, எங்களுடைய கட்சியின் ஆதரவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்’ என்றனர். இதைக் கேட்ட மன்மோகன் சிங் பயந்தார். ஆனால் காங்கிரஸின் மூத்த அமைச்சர் ஒருவர்  மன்மோகன்சிங்கிடம் ‘இது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நான்  பார்த்துக்கொள்கிறேன்’ என்றார்.

 நீதிபதி லகோதியிடம் சென்ற அந்த காங்கிரஸ் அமைச்சர், ‘அந்த  நீதிபதியை பதவியிலிருந்து நீக்கினால் அரசியல் ரீதியான பிரச்சினைகள் வரும்’ என்று கூறியிருக்கிறார். பிறகு  குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு ஓராண்டு காலம் பதவியை நீட்டித்து இந்திய  அரசிற்கு  லகோதி கடிதம் எழுதினார். 

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான   நீதிபதியுடன் இருந்த மற்ற  6  நீதிபதிகளும் நிரந்தர நீதிபதி ஆகும் போது, இந்த நீதிபதிக்கு மட்டும் கால நீட்டிப்பு செய்வதைக் குறித்து  மற்ற இரண்டு நீதிபதிகளிடம்  நீதிபதி லகோதி கலந்து பேசினாரா என்பதை எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

அதன் பிறகு அவருக்கு அடுத்து தலைமை நீதிபதியாக வந்த நீதிபதி  கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள், அந்த நீதிபதிக்கு,  மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு  நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு அளித்தார் என்று  கட்ஜு தனது பதிவில் எழுதியுள்ளார். யார் அந்த நீதிபதி என்பதை கட்ஜு குறிப்பிடவில்லை.

இதைத் தவிர வேறு சில விஷயங்களையும் கட்ஜு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தான் பதவியில்  இருந்த காலங்களில் கத்தோலிக்க ஆர்ச் பிஷப் ஒருவர்  நீதிபதியாக  நியமிக்க  ஒருவருக்கு பரிந்துரை செய்ய தன்னை சந்திக்க வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்ததாகவும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .

அப்போது முதலமைச்சராக இருந்தும் ஜெயலலிதா  நீதித்துறை செயல்பாடுகளில் எப்போதுமே தலையிடவில்லை. குறிப்பிட்ட நபரை நியமிக்க வேண்டுமென்றோ, வேறு எந்தப் பரிந்துரைகளையும் செய்ததில்லை. ஆனால் வேறு கட்சிகளைச்சேர்ந்த நபர்கள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் சிலரை நீதிபதிகளாக நியமிக்க வலியுறுத்தியதாகவும், அவர்கள் பரிந்துரைத்த நபர்கள் எவரும் நீதிபதி பதவிக்கு தகுதியே இல்லாதவர்கள் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment