Saturday, 13 December 2014

பெங்களூரு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் பிடித்து அனுப்பும் வேலையில் ஈடுபட்ட மேதி மஸ்ரூர் பிஸ்வாஸை பெங்களூர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மாற்று நம்பிக்கையாளர்களை கொன்று குவித்து வருகிறது. அவர்கள் கொள்கைகளை செயல்படுத்தும் இஸ்லாமிய நாடுகளை உருவாக்க அந்த அமைப்பு துடித்து வருகிறது. ஈராக்கின் பல பகுதிகளையும் அவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்த அமைப்பில் சேர்ந்து எதிரிகளை கொல்வதற்காக புனித போராளிகள் என்ற பெயரில் பல நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் ஈராக் செல்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் இருந்து சென்ற சில வாலிபர்கள், அந்த வாழ்க்கை பிடிக்காமல் தாயகம் திரும்பினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தாங்கள் ஈர்க்கப்பட்டு சென்றதாக கூறினர். இதையடுத்து சமூக வலைத்தளங்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. பன்னாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான் இங்கிலாந்தை சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி சேனல் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபர், @shamiwitness என்ற ட்விட்டர் அக்கவுண்ட் மூலமாக பலரையும் மூளை சலவை செய்து வந்ததாக அந்த சேனல் கூறியது. இந்த மேதி பிஸ்வாஸ், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் பெங்களூரிலுள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது ட்விட்டர் அக்கவுண்டில் 17,700 ஃபாலோவர்கள் உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ள 3ல் 2 பங்கு பேர் இவரது டிவிட்டர் அக்கவுண்ட்டை ஃபாலோ செய்பவர்கள்தான் என்றும் சேனல்4 தெரிவித்திருந்தது. பெங்களூவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கால் வைத்துவிட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார் வடக்கு பெங்களூரின் ஜாலஹள்ளியில் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் வசிப்பதை கண்டறிந்து நேற்றிரவு அவரை கைது செய்தது. இதையடுத்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும், பெங்களூரு போலீசாரும் இணைந்து மேதி மஸ்ரூர் பிஸ்வாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, தீவிரவாத அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அதில் இடம்பெற்ற வாசகங்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/mehdi-picked-up-bangalore-police-216894.html

No comments:

Post a Comment