சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி
குடகு மலையில் தோன்றித் தஞ்சைக்கு ஓடிவந்த காவிரி கூடவே காபி மீதான காதலையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தஞ்சை நகரின் எந்தவொரு ஹோட்டலிலும் காபியின் சுவைக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கையில் காபியா, டீயா என்று கேட்பது வழக்கமில்லை. காபி ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கும். பால் இல்லாத வேளைகளில் வரக் காப்பியைத் (பால் கலக்காத காபி) துணையாகக் கொள்வதும் உண்டு.
காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச் சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம், அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூட உண்டு.
முதல் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் காபி அருந்துவது தமிழகக் கலை இலக்கிய ரசனையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது. தி. ஜானகிராமன் தனது கதாபாத்திரங்களை நுரைத்து மணத்த “கும்மாணம்” காபியை உள்ளம் குளிரக் குடிக்க வைத்து மனநிறைவை அடைந்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் தனது வடிகால் வாரியம் என்ற கதையில் காபி போடும் செய்முறையை வாசகர்களுக்கு விளக்கி உதவியிருக்கிறார். கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் ஆடை படராமல் தயாரிக்கிற காபிக்குத்தான் டிகிரி காபி என்ற முதல் மரியாதை. பாலுக்கு இணையான முக்கியத்துவம் காபி டிக்காஷனைத் தயாரிப்பதற்கும் உண்டு.
நூறு கிராம் அளவுள்ள காபிக் கொட்டைகளைப் பதமான சூட்டில் வறுத்து அரைத்தெடுக்கையில் அது எண்பது கிராம் வர வேண்டும். அந்தக் காபிப்பொடியிலிருந்து டிக்காஷன் வடித்தெடுக்க இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காபிப் பொடியிலிருந்து இரண்டாவது தடவை டிக்காஷன் வடிக்கக் கூடாது. டிக்காஷனைப் பாய்லரில் வைத்து சூடு காக்க வேண்டும். காபி கலக்கும்போது முதலில் சர்க்கரையை இட்டு அதன்மீது டிக்காஷனை ஊற்றி அதற்கும் மேலாகத் தேவையான அளவில் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கேயும் எப்போதும் பாக்கெட் பால் என்றாகிவிட்ட பிறகு டிகிரி காபி என்று பெயர் சொல்வதில் இப்போது எந்தப் பொருத்தமும் இல்லை.
கடையில் பாய்லரும் பித்தளை டவராக்களும் இருந்தால் மட்டும் டிகிரி காபி ஆகிவிடாது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்காமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
No comments:
Post a Comment